நெல்லை: நடிகர் நெப்போலியன் மகன் தனுஷ் குறித்து சமூக வலைதளங்களில் பரவிய வதந்தி வீடியோக்கள் காவல்துறை நடவடிக்கையால் நீக்கப்பட்டுள்ளன.
நடிகர் நெப்போலியன் மகன் தனுஷ் குறித்து பல்வேறு தவறான தகவல்கள் சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வந்தது. குறிப்பாக அவரது திருமண வாழ்க்கை குறித்தும், உடல் நலம் குறித்தும் பொய்யான வீடியோக்கள் வெளியிடப்பட்டிருந்தன. இதையடுத்து பொய்யான வீடியோக்களை வெளியிட்டவர்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், சமூக வலைதளங்களில் இருந்து அந்த வீடியோக்களை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கடந்த சில நாட்களுக்கு முன் நெப்போலியன் குடும்பத்தினர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என். சிலம்பரசனிடம் மனு அளித்தனர்.
அதன்பேரில் திருநெல்வேலி மாவட்ட சைபர் கிரைம் போலீஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். பல்வேறு சமூக வலைதள நிறுவனங்களை தொடர்பு கொண்டு, நெப்போலியன் மகன் குறித்த வதந்தி பரப்பும் வீடியோக்களை நீக்குமாறு கேட்டுக்கொண்டனர். அதன்படி தற்போது சமூக வலை தளங்களில் இருந்து அந்த வீடியோக்கள் நீக்கப்பட்டுள்ளன.