சென்னை: பல்லாவரம் மறைமலை அடிகள் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவர்களில் சட்ட நுழைவுத் தேர்வு, மெரிட் ஸ்காலர்ஷிப் மற்றும் தமிழ் திறனாய்வுத் தேர்வு போன்ற போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற்ற மாணவர்களை ஊக்குவிக்கும் விதமாக இப்பள்ளியின் 13 மாணவ, மாணவிகள் கடந்த ஏப்.18ம் தேதி பெங்களூருவுக்கு விமானம் மூலம் அழைத்துச் செல்லப்பட்டு, அங்குள்ள அறிவியல் ஆர்வத்தைத் தூண்டும் விஸ்வேஸ்வரய்யா தொழில், தொழில்நுட்ப அருங்காட்சியகத்தை பார்வையிட்டனர்.
பள்ளி நிர்வாகமும், 'தட்ஸ் மை சைல்ட்' (Thats my child) அமைப்பும் இணைந்து இந்தப் பணியை மேற்கொண்டனர். ஆசிரியர் இராஜேஸ்வரி அந்த மாணவர்களுடன் சென்றார். இதே போல் கடந்த வருடம் போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற்ற மாணவர்கள் திருவனந்தபுரம் இஸ்ரோ மையத்தை பார்வையிட விமானத்தில் அழைத்து செல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மாணவர்கள் தங்கள் அனுபவங்களைப் பற்றி கூறியதாவது: விமானப் பயணம் புதிய அனுபவத்தை கொடுத்தது. பெங்களூருவில் உள்ள விஸ்வேஸ்வரய்யா தொழில் நுட்ப அருங்காட்சியகத்தை பார்வையிட்டோம். இது விண்வெளி மற்றும் விண்வெளி தொழில் நுட்பத்துக்காக அர்ப்பணிக்கப்பட்ட இந்தியாவின் முதல் அறிவியல் காட்சிக்கூடம் ஆகும். இதனை பார்வையிட்டது பிரமிப்பை ஏற்படுத்தியது. மேலும் விஸ்வேஸ்வரய்யா அருங்காட்சியகத்தில் சந்திரயான் 3-ன் முழு அளவிலான மாதிரி காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது மிகவும் சிறப்பாக இருந்தது.
1962 இல் நிறுவப்பட்ட இந்த அருங்காட்சியகம், இந்தியாவின் முதல் பிரதமர் பண்டிட் ஜவஹர்லால் நேருவால் திறந்து வைக்கப்பட்டது என்பதை தெரிந்துகொண்டோம். மேலும் இந்த விமானப் பயணத்துக்கு உதவிய தட்ஸ் மை சைல்ட் அமைப்புக்கும் பள்ளி நிர்வாகத்துக்கும் நன்றி. இவ்வாறு மாணவர்கள் கூறினர்.