சென்னை: விசைத்தறி உரிமையாளர்கள் பிரச்சினையை தீர்க்க தமிழக அரசு துரித நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார். தமிழக சட்டப்பேரவையில் நேற்று பூஜ்ஜிய நேரத்தில், கோவை, திருப்பூரில் நடைபெறும் விசைத்தறி உரிமையாளர்கள் போராட்டம் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி கவனஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்து பேசும்போது, “கோவை, திருப்பூர் மாவட்டங்களில் இயங்கி வரும் 1.5 லட்சம் விசைத்தறிகளில் கூலிக்கு நெசவு செய்வோர் கூலி உயர்வு கேட்டு போராடி வருகின்றனர். மேலும், 2022 முதல் கூலி குறைத்து வழங்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளனர்.
நியாயமான நெசவுக் கூலி உயர்வு வழங்கக் கோரி மார்ச் 19-ம் தேதி முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும், சோமனூரில் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்று வருகிறது. எனவே, விசைத்தறி உரிமையாளர் சங்கங்களின் கூட்டமைப்புடன் அரசு பேச்சு வார்த்தை நடத்தி, உரிய தீர்வுகாண வேண்டும்” என்றார். இதற்கு அமைச்சர்கள் அளித்த பதில் விவரம்:
அமைச்சர் தங்கம் தென்னரசு: அமைச்சர்களும், மாவட்ட ஆட்சியர்களும் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். இப்பிரச்சினையை தீர்க்க வேண்டும் என்பதில் முதல்வர் உறுதியாக உள்ளார். பிரச்சினையை உடனடியாக தீர்ப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு எடுத்து வருகிறது.
அமைச்சர் செந்தில் பாலாஜி: விசைத்தறி உரிமையாளர்களுக்கு வழக்கப்பட்டு வரும் இலவச மின்சாரம் 750 யூனிட்டிலிருந்து 1,000-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதனால் 1.67 லட்சம் விசைத்தறி உரிமையாளர்களில் 1.27 லட்சம் பேர் 1,000 யூனிட்டுக்குள்தான் மின்சாரம் பயன்படுத்துகின்றனர். சுமார் 30 ஆயிரம் பேர் மட்டுமே மின் கட்டணம் செலுத்துகின்றனர். இத்திட்டத்துக்காக அரசு மானியம் ரூ.571 கோடி வழங்கப்பட்டுள்ளது.
அமைச்சர் ஆர்.காந்தி: விசைத்தறி உரிமையாளர்கள் மார்ச் 19-ம் தேதிதான் போராட்டத்தை தொடங்கினர். ஆனால், முதல்வர் ஸ்டாலின் உத்தரவின் பேரில் பிப்.27-ம் தேதியே விசைத்தறி உரிமையாளர்களை அழைத்து, திருப்பூர் மாவட்ட வருவாய் அலுவலர், தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்திஉள்ளனர். ஏப். 11-ம் தேதி ஆட்சியர் அலுவலகத்தில் அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன், கயல்விழி செல்வராஜ் ஆகியோர் தலைமையில் சமரசக் கூட்டமும் நடைபெற்றது.
ஏப்.15-ல் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் விசைத்தறி உரிமையாளர்கள் 28 சதவீதம் ஊதிய உயர்வு கோரினர். பணி வழங்குவோர் 5 சதவீதம் தர சம்மதித்தனர். பின்னர் விசைத்தறி உரிமையாளர்கள் கூடி பேசி முடிவு செய்துவிட்டு வருவதாகச் சென்றனர். இந்த பிரச்சினையை முடிவுக்கு கொண்டுவர அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இவ்வாறு அவர்கள் பதில் அளித்தனர்.