மேல்பாதியில் 22 மாதங்களுக்கு பின்னர் திரவுபதி அம்மன் கோயிலில் பக்தர்கள் தரிசிக்க அனுமதி


விழுப்புரம் அருகே மேல்பாதி கிராமத்தில் உள்ள திரவுபதி அம்மன் கோயிலில் நேற்று தரிசனத்துக்குச் சென்ற பொதுமக்கள்.

விழுப்புரம்: இரு சமூகத்தினர் இடையே ஏற்பட்ட பிரச்சினையால் 22 மாதங்களாக போடப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டு, மேல்பாதி திரௌபதி அம்மன் கோயிலில் நேற்று அனைத்துத் தரப்பு மக்களும் வழிபாடு செய்ய அனுமதி வழங்கப்பட்டது.

விழுப்புரம் அருகே மேல்பாதி கிராமத்தில் உள்ளது தர்மராஜா திரௌபதி அம்மன் கோயில். இக்கோயிலுக்குள் சென்று வழிபடுவது தொடர்பாக இரு சமுதாய மக்களிடையே மோதல் ஏற்பட்டது.

இதன் காரணமாக 2023 ஜூன் 7-ம் தேதி கோயில் பூட்டி, சீல் வைக்கப்பட்டது. கோயிலை மீண்டும் திறந்து, வழிபாட்டுக்கு அனுமதிக்க வேண்டும் எனக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு தரப்பினர் வழக்குத் தொடுத்தனர். இதையடுத்து, கோயிலைத் திறந்து பொதுமக்கள் யாரையும் அனுமதிக்காமல், தற்காலிகமாக ஒருகால பூஜை மட்டும் நடத்த உயர் நீதிமன்றம் அனுமதி அளித்தது. அதன் பேரில் 2024 மார்ச் 22-ம் தேதி கோயில் திறக்கப்பட்டு, அன்று முதல் ஒருகால பூஜை நடத்தப்பட்டு வந்தது.

வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில், வருவாய்க் கோட்டாட்சியரால் போடப்பட்ட தடை உத்தரவை ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்றம், அனைத்து சமுதாயத்தினரும் கோயிலுக்குள் சென்று வழிபடலாம் என்ற உத்தரவையும் பிறப்பித்தது. இதைத் தொடர்ந்து, இரு தரப்பினரும் வழிபடுவது தொடர்பான சமாதானக் கூட்டம் விழுப்புரம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் கடந்த மார்ச் 19-ம் தேதி நடத்தப்பட்டது.

மீண்டும் 21-ம் தேதி விழுப்புரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற சமாதானக் கூட்டத்தில் பங்கேற்ற இரு சமுதாயத்தினரும், கோயிலைத் திறந்து தரிசனம் செய்வது தொடர்பாக சமாதானமாகச் செல்வதாக ஒப்புக் கொண்டனர். நீதிமன்ற உத்தரவைப் பின்பற்றி நடந்து கொள்வதாகவும், யாரையும் தடை செய்ய மாட்டோம் என்றும் தெரிவித்தனர்.

“சுமார் 2 ஆண்டுகளாக கோயில் பூட்டிக் கிடப்பதால், கோயில் வளாகத்தில் உள்ள முட்புதர்களை அகற்றி தூய்மை செய்தல்,கோயில் வளாகத்தில் கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்துதல் உள்ளிட்ட பணிகளுக்கு சில நாட்கள் காலஅவகாசம் தேவைப்படுகிறது” என்று கோட்டாட்சியர் முருகேசன் தெரிவித்தார்.

இதையடுத்து, கோயில் வளாகம் தூய்மைப்படுத்தப்பட்டது. இப்பணிகள் முடிவடைந்த நிலையில் நேற்று காலை விழுப்புரம் எஸ்.பி. சரவணன் தலைமையிலான போலீஸார் பாதுகாப்புடன், அனைத்து சமுதாயத்தினரும் கோயிலுக்குள் சென்று வழிபட அனுமதிக்கப்பட்டனர். கோயிலைச் சுற்றிலும் ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டு, பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இதையடுத்து, 100-க்கும் மேற்பட்டோர் அம்மனை வழிப்பட்டனர். அதேநேரத்தில், ஒரு சமுதாயத்தினர் மட்டும் கோயிலுக்கு வரவில்லை. நல்ல நாள் பார்த்து, வெள்ளிக்கிழமை (இன்று) கோயிலுக்குச் சென்று வழிபாடு நடத்த உள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.

x