புதுச்சேரியில் ஒரே ஆம்புலன்ஸில் அதிக எண்ணிக்கையில் கர்ப்பிணிகள் - 'வைரல்' பின்னணி 


புதுச்சேரி: புதுச்சேரியில் அளவுக்கு அதிகமாக கர்ப்பிணி பெண்கள் மற்றும் பச்சிளம் குழந்தைகளுடன் தாய்மார்களை ஒரே ஆம்புலன்ஸில் அழைத்துச் சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

புதுச்சேரி எல்லைப்பிள்ளைசாவடியில் ராஜிவ்காந்தி அரசு மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இங்கு புதுச்சேரி மட்டுமின்றி தமிழகத்தைச் சேர்ந்த பெண்கள், குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. மேலும் கர்ப்பிணி பெண்கள் மற்றும் பச்சிளம் குழந்தைகளுடன் தாய்மார்களுக்கு பரிசோதனைகள், ஆலோசனைகளும் வழங்கப்பட்டு வருகிறது.

இருப்பினும் இந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் கர்ப்பிணி பெண்கள், பிறந்த குழந்தைகளுக்கு கண், மூக்கு, தொண்டை சம்மந்தப்பட்ட இஎன்டி பரிசோதனை, அறுவை சிகிச்சை உள்ளிட்டவை தொடர்பான பரிசோதனைகள், ஆலோசனைகளுக்கு இந்த மருத்துவமனையில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் சட்டப்பேரவை அருகே உள்ள புதுச்சேரி அரசு பொது மருத்துவமனைக்கு தினசரி அழைத்துச் செல்லப்படுகின்றனர்.

இந்நிலையில், அளவுக்கு அதிகமாக கர்ப்பிணி பெண்கள் மற்றும் பச்சிளம் குழந்தைகளுடன் தாய்மார்களை ஒரே ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சமீப நாட்களாக ஒரே நேரத்தில் பச்சிளம் குழந்தைகளுடன் தாய்மார்கள் மற்றும் நிறைமாத கர்ப்பிணிகள் என 10-க்கும் மேற்பட்டோரை ஒரே ஆம்புலன்ஸ் வாகனத்தில் அழைத்து சென்று வருவதால் பெரும் சிரமத்துக்கு ஆளாகி வருவதாகவும் புகார் எழுந்துள்ளது.

இது குறித்து ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனை அதிகாரிகளிடம் கேட்டபோது, ''மகளிர், குழந்தைகள் சம்மந்தப்பட்ட மருத்துவமனை என்பதால் அதற்குண்டான சிகிச்சைகள் சிறந்த முறையில் அளிக்கப்படுகிறது. ஆனால் அறுவை சிகிச்சை, சிடி ஸ்கேன், இஎன்டி, கண் உள்ளிட்டவைகள் தொர்டபான பரிசோதனைகள், ஆலோசனைகள் பெறுவதற்கு இங்கிருந்து அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர்.

தினசரி காலை 8.30 மணி முதல் 4 முறை (ஷிப்ட்) ஆம்புலன்ஸில் அழைத்துச் சென்று வரப்படுகிறது. இதில் குறைந்தது ஒருமுறை 5 பேர் வரை அழைத்துச் செல்லப்படுவதுண்டு. அதிகமானோர் இருக்கும் போது கூடுதலாக அழைத்துச் செல்லப்படுகின்றனர். இது தினசரி நிகழ்வுதான். ஏதேனும் ஒரு நாள் இதுபோன்ற கூட்டம் அதிகளவில் இருப்பதை பார்த்து யாரேனும் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டிருக்கலாம். இது தொடர்பாக தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றனர்.

x