தஞ்சாவூர்: பட்டுக்கோட்டையில் 100 ஆண்டுகள் பழமையான நாடிமுத்துப்பிள்ளை கட்டிடம், ஒரு காலத்தில் அதிகாரமிக்க அலுவலகமாக திகழ்ந்த நிலையில், இன்று புனரமைக்கப்பட்டும் கேட்பாரற்ற நிலையில் காணப்படுகிறது. இந்த கட்டிடத்தை மீண்டும் அரசு அலுவலகங்கள் அல்லது போட்டித் தேர்வர்களுக்கான மையமாக உருவாக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை நகரின் மையப் பகுதியில் 1926ம் ஆண்டு ஜனவரி 20ம் தேதி நாடிமுத்துப் பிள்ளை கட்டிடத்துக்கு அடிக்கல் நாட்டப்பட்டு, அதே ஆண்டு அக்டோபர் 11ம் தேதி தமிழக ஆளுநர் கான்பகதூர் முகமது உஸ்மான்சாய் பகதூர் என்பவர் திறந்து வைத்தார். 2 தளங்களைக் கொண்ட இந்த கட்டிடம், செட்டிநாடு அரண்மனை போன்று, ஆங்கிலேயேர் கட்டிட பாணியில் கட்டப்பட்டது. ஆயிரம் சதுர அடிக்கு மேல் கொண்ட இந்த கட்டிடத்தில் முதன் முதலாக தாலுகா போர்டு அலுவலகம் செயல்பட்டது. அதன் பின்னர் கோட்ட வளர்ச்சி அலுவலகமும், அதைத் தொடர்ந்து கோட்டாட்சியர் அலுவலகமும், பின்னர் ஊராட்சி ஒன்றிய அலுவலகமும் செயல்பட்டு வந்தது.
இதற்கிடையில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு போதிய இடம் இல்லை எனக் கூறி கடந்த சில ஆண்டுகளுக்கு முன் தனியாக கட்டிடம் கட்டப்பட்டு இடமாற்றம் ஆனதும், நாடிமுத்துப்பிள்ளை கட்டிடம் கேட்பாரற்று போனது. 2018-ம் ஆண்டு கஜா புயல் பட்டுக்கோட்டை பகுதியில் கோரதாண்டவமாடியபோது நாடி முத்துப்பிள்ளை கட்டிடத்தின் மேற்கூரை சேதமடைந்தது. இதையடுத்து பழமையான இந்த கட்டிடத்தை சீரமைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் பலரும் மாவட்ட நிர்வாகத்துக்கு கோரிக்கை விடுத்தனர்.
இதைத் தொடர்ந்து கடந்த காலங்களில் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர்களாக பணியாற்றிய தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், தீபக் ஜேக்கப் ஆகியோரின் முழு முயற்சியால் இந்த கட்டிடம் ரூ.20 லட்சம் மதிப்பில் பழமை மாறாமல் சீரமைக்கப்பட்டது. புனரமைக்கப்பட்ட இந்தக் கட்டிடத்தில் அரசு துறையின் பிற அலுவலகங்கள் அல்லது போட்டித் தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் பயன்பாட்டுக்கு வழங்கும் வகையில் கட்டிடம் சீரமைக்கப்பட்டு கடந்த 8 மாதங்களுக்கு மேல் பயன்பாட்டுக்கு வராமல் அப்படியே காட்சிப் பொருளாக காணப்படுகிறது. இதனால், இந்தக் கட்டிடம் மீண்டும் சேதமாகும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
இது குறித்து பொன்னவராயன்கோட்டையைச் சேர்ந்த முன்னோடி விவசாயி வா.வீரசேனன் கூறியது: பட்டுக் கோட்டையில் ஆங்கிலேயேர் ஆட்சிக் காலத்தில் அதிகாரமிக்க அலுவலகமாக இருந்த நாடி முத்துப்பிள்ளை கட்டிடம், நல்ல வலுவான உறுதி தன்மையோடு உள்ளது. இந்த கட்டிடத்தில் பல்வேறு அரசு அலுவலகங்கள் செயல்பட்ட நிலையில் தற்போது எந்த அலுவலகமும் செயல்படவில்லை. நகரின் மையப் பகுதியில் உள்ள இந்த கட்டிடம் புனரமைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், இரு மாவட்ட ஆட்சியர்கள் முழு முயற்சி எடுத்து இதற்கான பணிகளை மேற்கொண்டு சீரமைக்கப்பட்டுள்ளது.
ஆனால், பணிகள் முடிந்து கடந்த 8 மாதங்களுக்கு மேல் உள்ள இந்த கட்டிடம் இன்னும் பயன்பாட்டுக்கு திறக்கப்படவில்லை. பட்டுக்கோட்டையில் அரசு அலுவலகங்கள், கூட்டுறவு நிறுவனங்கள் என பல அரசு மற்றும் பொதுத்துறை சார்ந்த அமைப்புகள் தனியார் வாடகை கட்டிடங்களில் இயங்கி வரும் சூழலில், இந்த பழமையான, புனரமைக்கப்பட்ட கட்டிடத்தில் அலுவலகங்களை இயக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
இது குறித்து மாவட்ட வருவாய்த் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, ”பட்டுக்கோட்டையில் நாடிமுத்துப்பிள்ளை கட்டிடத்தின் புனரமைப்பு பணிகள் முடிந்துவிட்டன. விரைவில் அங்கு அரசு துறை சார்ந்த அலுவலகம் அல்லது மாணவர்கள் பயன்படும் வகையில் நூலகம் ஏற்படுத்தப் படும்” என்றனர்.