தஞ்சாவூர்: அண்ணன் கைது செய்யப்பட்டதால், காவல் நிலையம் முன் விஷம் குடித்து தங்கை உயிரிழந்த சம்பவம் தொடர்பாக நடுக் காவேரி காவல் நிலைய உதவி ஆய்வாள்ர்கள் 2 பேர், பெண் தலைமை காவலர் என 3 பேர் நேற்று முன்தினம் பணியிட மாற்றம் செய்யப் பட்டுள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு வட்டம் நடுக்காவேரி அரசமரத் தெருவைச் சேர்ந்தவர் அய்யாவு மகன் அய்யா தினேஷ்(32). பொது இடத்தில் கத்தியைக் காட்டி மிரட்டியதாகக் கூறி, இவரை நடுக்காவேரி போலீஸார் ஏப்.8-ம் தேதி கைது செய்தனர். ஆனால், அய்யா தினேஷ் மீது பொய் வழக்குப் பதிவு செய்யப்பட்டதாகக் கூறி, அவரது தங்கைகளான மேனகா(31), கீர்த்திகா(29) இருவரும் நடுக்காவேரி காவல் நிலையம் முன் களைக்கொல்லி மருந்தைக் குடித்தனர்.
இதையடுத்து, 2 பேரும் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில், பொறியியல் பட்டதாரியான கீர்த்திகா ஏப்.9ம் தேதி உயிரிழந்தார். மேனகா தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். இந்தச் சம்பவம் தொடர்பாக நடுக்காவேரி காவல் நிலையத்துக்குப் பொறுப்பு வகிக்கும் திருவையாறு காவல் ஆய்வாளர் சர்மிளா ஏப்.11ம் தேதி காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார்.
ஆனால், கீர்த்திகா குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். அய்யா தினேஷ் மீது பதிவு செய்யப்பட்ட அனைத்து வழக்குகளையும் ரத்து செய்ய வேண்டும். காவல் ஆய்வாளர் சர்மிளா உட்பட 4 போலீஸாரை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி கீர்த்திகாவின் உடலை வாங்க மறுத்து நடுக்காவேரி அரசமரத் தெருவில் தொடர்ந்து 7-வது நாளாக உறவினர்கள் உள்ளிட்டோர் நேற்று காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், நடுக்காவேரி காவல் உதவி ஆய்வாளர் அறிவழகன் வல்லம் காவல் நிலையத்துக்கும், மற்றொரு உதவி ஆய்வாளர் கலியபெருமாள் வாட்டாத்திக்கோட்டை காவல் நிலையத்துக்கும், பெண் தலைமை காவலர் மணிமேகலை திருவோணம் காவல் நிலையத்துக்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை மாவட்டக் காவல் அலுவலகம் நேற்று முன்தினம் பிறப்பித்தது உள்ளது.