தஞ்சாவூர் ரயில் நிலைய முகப்பில் மீண்டும் பெரிய கோயில் மாதிரியை அமைக்க வேண்டும்: ஆர்ப்பாட்டம்


படம்: ஆர்.வெங்கடேஷ்

தஞ்சை: தஞ்சாவூர் ரயில் நிலைய முகப்பில் மீண்டும் பெரிய கோயில் மாதிரியை வடிவமைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, அனைத்து மக்கள் இயக்கங்கள் சார்பில் தஞ்சாவூர் தலைமை அஞ்சல் நிலையம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

உலகத் தமிழர் பேரமைப்பின் துணைத் தலைவர் அயனாபுரம் சி.முருகேசன் தலைமை வகித்தார். மூத்த வழக்கறிஞர்கள் கோ.அன்பரசன், வெ. ஜீவகுமார், வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநகரச் செயலாளர் ஆர்.ஜெயக்குமார், முள்ளிவாய்க்கால் இலக்கிய முற்ற நிர்வாகி துரை. குபேந்திரன், மூத்த பொறியாளர் ஜோ.கென்னடி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், திரளானோர் பங்கேற்றனர்.

ஆர்ப்பாட்டத்தில், தஞ்சாவூர் ரயில்வே நிலையம் முகப்பில் ஏற்கெனவே உலகப் பிரசித்தி பெற்ற தஞ்சாவூர் பெரிய கோயில் மாதிரி வடிவமைக்கப் பட்டிருந்தது. தற்போது நடைபெற்று வரும் சீரமைப்பு பணிகளால் பெரிய கோயில் மாதிரியை எடுத்துவிட்டு, அதற்கு பதிலாக வடநாட்டு மந்திர் கோயில் போன்று வடிவமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

தமிழர்களின் பண்பாடு, கலாச்சாரம், கட்டிடக்கலை, ஜனநாயக அமைப்பு முறைகளுக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் தஞ்சாவூர் பெரிய கோயில் வடிவமைப்பை முன்பிருந்தவாறு தஞ்சாவூர் ரயில்வே நிலைய முகப்பில் வைக்க வேண்டும். வடநாட்டு மந்திர் கோயில் வடிவமைப்பை உடனடியாக அகற்ற வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் சின்னை.பாண்டியன் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட நிர்வாகக் குழு உறுப்பினர் வெ.சேவையா ஆர்ப்பாட்டத்தை முடித்து வைத்தார். இடதுசாரிகள் பொதுமேடை ஒருங்கிணைப்பாளர் துரை.மதிவாணன் நன்றி கூறினார்.

x