ராமநாதபுரம்: ஹஜ் பயணம் மேற்கொள்ளும் 52 ஆயிரம் பேருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளதால் பிரதமர் தலையிட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என முஸ்லிம் ஐக்கிய ஜமாத் கோரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து ராமநாதபுரம் மாவட்ட முஸ்லிம் ஐக்கிய ஜமாத் தலைவர் எம்.எஸ்.ஏ.ஷாஜகான், பொதுச் செயலாளர் ஏ.ஜெய்னுல் ஆலம் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தனியார் நிறுவனங்களின் மூலம் புனித ஹஜ் பயணம் மேற்கொள்வதற்கு நாடு முழுவதும் 52 ஆயிரம் பேருக்கு சவுதி அரேபியா அரசு விசா வழங்க ஒப்புதல் அளித்து அதற்கான கட்டணத்தை மார்ச் 25-க்குள் செலுத்த வேண்டும் என்று அறிவித்திருந்தது.
இந்நிலையில் இந்தியாவில் தனியார் ஹஜ் ஏஜென்சிகள் தங்களுக்கான கட்டணத்தை மத்திய ஹஜ் கமிட்டியிடம் செலுத்திவிட்ட நிலையில், மத்திய சிறுபான்மை நலத்துறையின் அலட்சியப் போக்கால் மத்திய ஹஜ் கமிட்டி உரிய நேரத்தில் இத்தொகையை சவுதி அரசாங்கத்துக்குச் செலுத்தாத காரணத்தால், 52 ஆயிரம் பேரும் இந்தாண்டு புனித ஹஜ் பயணம் மேற்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இஸ்லாமியர்களின் ஐந்தாவது புனிதக் கடமையான ஹஜ் பயணம் மேற்கொள்வதைத் தடுக்கும் வகையில் மத்திய அரசின் இத்தகைய செயல் பாடுகள் மிகுந்த வேதனை அளிக்கிறது. உடனடியாக பிரதமரும், வெளியுறவுத் துறை அமைச்சரும் இது குறித்து சவுதி அரேபியா நாட்டு அரசாங்க த்திடம் பேசி, 52 ஆயிரம் இந்தியர்கள் புனித ஹஜ் பயணம் மேற்கொள்வதை உறுதி செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.