கிருஷ்ணகிரி: கர்நாடக மாநில தென்பெண்ணை ஆற்றில் ரசாயன கழிவுநீர் கலப்பதால், ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நுரை பொங்க வரும் நீர் மாசடைந்திருப்பதாகவும், இதை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் குற்றம்சாட்டியுள்ளது.
கர்நாடகா மாநில நந்தி மலையில் உற்பத்தியாகும் தென்பெண்ணை ஆறு கர்நாடக மாநிலத்தில் 112 கிமீ தூரம் பயணித்து ஓசூர் கெலவரப்பள்ளி மற்றும் கிருஷ்ணகிரி அணை வழியாக பல்வேறு மாவட்டங்களில் பயணித்து வங்காள விரிகுடாவில் கலக்கிறது. இதன் மூலம் தமிழகத்தில் பல ஆயிரக்கணக்கான பாசன நிலங்கள் பயனடைந்து வருகின்றன.
இந்நிலையில், கடந்த பல ஆண்டுகளாகக் கர்நாடக மாநில தென்பெண்ணை ஆற்றில் தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறும் ரசாயன கழிவு நீர் மற்றும் பெங்களூரு மாநகர குடியிருப்பு பகுதியில் உள்ள சாக்கடை கழிவு நீர் நேரடியாகக் கலக்கிறது. இதனால், தமிழகத்துக்கு வரும் தென்பெண்ணை ஆற்று நீர் மாசடைந்து வருகிறது. குறிப்பாக, கெலவரப்பள்ளி அணைக்கு ரசாயன நுரை பொங்கத் தண்ணீர் வருகிறது. இதனால், நீர் மாசடைந்து இப்பகுதியின் வேளாண் பணிகள் பல ஆண்டுகளாகப் பாதிக்கப்பட்டு வருவது தொடர்ந்து வருகிறது.
இந்நிலையில் கெலவரப்பள்ளி அணையிலிருந்து மார்ச் மாதம் பாசனத்துக்கு இடது மற்றும் வலது புறக் கால்வாய்கள் மூலம் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதன் மூலம் 8 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெறும் நிலையில், நீர் மாசு காரணமாக வழக்கம்போல மகசூல் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால், பாசன விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
அரசு கண்டு கொள்வதில்லை: இது தொடர்பாக தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் மேற்கு மாவட்டச் செயலாளர் கணேஷ் ரெட்டி மற்றும் விவசாயிகள் கூறியதாவது: தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலத்தில் உள்ள தொழிற்சாலைகளில் இருந்தும் வெளியேற்றப்படும் கழிவு நீர் தென்பெண்ணை ஆற்றில் நேரடியாகவும், டேங்கர் லாரிகள் மூலமாகவும் தென் பெண்ணை ஆற்றில் கலக்கப்படுகிறது. இதனால், கெலவரப் பள்ளி அணை நீர் மாசடைந்துள்ளது. மேலும், இந்நீரை பாசனத்துக்குப் பயன்படுத்தும்போது, பயிர்களில் நோய்த் தாக்கம் ஏற்பட்டு மகசூல் பாதிக்கிறது. இந்நீரைப் பருகும் கால்நடைகளுக்கும் நோய்த் தாக்கம் ஏற்படுகிறது.
இதைத் தடுக்க விவசாயிகள் பல்வேறு போராட்டங்களை நடத்தியும், நீர்வளத்துறை அதிகாரிகள் கண்டு கொள்வதில்லை, இது தொடர்பாக தமிழக அரசும் நடவடிக்கை எடுக்கவில்லை. ஏற்கெனவே கர்நாடக அரசுடன் காவிரி பிரச்சினை தொடரும் நிலையில், இப்பிரச்சினையை கையில் எடுக்க தமிழக அரசு விரும்பவில்லை எனத் தெரிகிறது.
மேலும், கெலவரப்பள்ளி அணையிலிருந்து ஆற்றில் வெளியேறும் நீர் கிருஷ்ணகிரி அணைக்குச் செல்லும் போது இயற்கையான சுத்தரிப்பு அடைந்து தெளிந்து விடுவதால், அதிகாரிகள் இப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதில் அலட்சியப் போக்கை காட்டி வருகின்றனர். இந்நீர் மாசு வரும் காலங்களில் தென்பெண்ணை ஆற்று பாசனப் பகுதியைப் பாதிக்கும் அபாயம் உள்ளது. எனவே, இதை அரசு தடுத்து நிறுத்த வேண்டும். இதை வலியுறுத்தி, விரைவில் விவசாயிகளை ஒருங்கிணைத்து ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.