மருதமலை கோயிலில் ரூ.110 கோடி செலவில் 184 அடி உயர முருகன் சிலை: அமைச்சர் சேகர்பாபு அறிவிப்பு 


சென்னை: கோவை மருதமலை அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ரூ.110 கோடி செலவில் 184 அடி உயர முருகன் சிலை அமைக்கப்படும் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அறிவித்துள்ளார்

தமிழக சட்டப்பேரவையில் இன்று இந்து சமய அறநிலையத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் அறிவிப்புகளை வெளியிட்ட அமைச்சர் சேகர்பாபு, ‘கோவை மருதமலை அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயில் அருங்காட்சியகம், வாகன நிறுத்துமிடம் அடிப்படை வசதிகளுடன் அறுங்கோண வடிவத்தில் அமைக்கப்பட்ட புல்வெளி நில அமைவிற்கு மத்தியில் புதிதாக ரூ.110 கோடி செலவில் 184 அடி உயர முருகன் சிலை அமைக்கப்படும்.

இறை தரிசனத்திற்கு வருகின்ற மாற்றுத்திறனாளிகளுக்கு திருக்கோயில்கள் சார்பில் இயக்கப்படும் பேருந்துகளில் கட்டணம் இல்லை. வின்ச் மற்றும் ரோப் கார்களில் கட்டணம் இல்லை. பழனி அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோயில் சார்பில் நடத்தப்பட்டு வரும் கல்லூரி விடுதி மாணவ, மாணவியருக்கு அனைத்து நாட்களிலும், மூன்று வேளையும் கட்டணமில்லா உணவு வழங்கப்படும்.

இந்து சமய அறநிலையத்துறை திருக்கோயில்களில் 70 ஓதுவார் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும். ஒருகால பூசைத் திட்டத்தின் கீழ் உள்ள 19,000 திருக்கோயில்களுக்கு ரூ.15 கோடியில் பூசை உபகரணங்கள் வழங்கப்படும். ரூ.25 கோடி அரசு மானியத்தில் ஒருகால பூசைத் திட்டம் இவ்வாண்டு 1,000 திருக்கோயில்களுக்கு விரிவுபடுத்தப்படும்.

திருக்கோயில்கள் சார்பில் இவ்வாண்டு 1,000 இணைகளுக்கு ரூ.70,000/- மதிப்பிலான சீர்வரிசைகளுடன் திருமணம் நடத்தி வைக்கப்படும். தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தான திருக்கோயில்களின் நிர்வாகம் & பராமரிப்பு செலவினத்திற்காக தற்போது வழங்கப்பட்டு வரும் அரசு மானியத் தொகை ரூ.6 கோடியிலிருந்து ரூ.8 கோடியாக உயர்வு. புதுக்கோட்டை தேவஸ்தான திருக்கோயில்களின் நிர்வாகம் (ம) பராமரிப்பு செலவினத்திற்காக தற்போது வழங்கப்பட்டு வரும் அரசு மானியத் தொகை ரூ.8 கோடியிலிருந்து ரூ.10 கோடியாக உயர்வு.

ரூ.6.83 கோடியில் 114 அடி உயர முருகன் சிலை
இராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு வட்டம், குமரகிரி, திமிரி, அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் புதிதாக அமைக்கப்படும். ரூ.30 கோடியில் 180 அடி உயர முருகன் சிலை ஈரோடு மாவட்டம், திண்டல், அருள்மிகு வேலாயுதசுவாமி திருக்கோயிலில் புதிதாக அமைக்கப்படும்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

x