அரிவாள் வெட்டு விவகாரம்: பாளையங்கோட்டையில் மாணவர்களின் புத்தக பைகளை சோதனையிட்ட ஆசிரியர்கள்


நெல்லை: பாளையங்கோட்டையில் உள்ள தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பு மாணவரை சக மாணவர் அரிவாளால் வெட்டிய சம்பவத்தை அடுத்து, நேற்று அப்பள்ளிக்கு வந்த மாணவர்களின் புத்தக பைகளை ஆசிரியர்கள் சோதனையிட்டனர்.

இப்பள்ளியில் 8ம் வகுப்பு மாணவர் ஒருவரை சக மாணவர் அரிவாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இதில் கைது செய்யப்பட்ட மாணவர் சிறுவர் நீதி குழுமத்தின் முன் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து, அம்மாணவரை வரும் 29ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டது. இதையடுத்து திருநெல்வேலி புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள சிறுவர்கள் கூர் நோக்கு இல்லத்தில் அந்த மாணவர் அடைக்கப்பட்டார்.

இச் சம்பவம் குறித்து பாளையங்கோட்டை வட்டாட்சியர் இசைவாணி விசாரணை நடத்தி, மாவட்ட ஆட்சியரிடம் அறிக்கை அளித்துள்ளார். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சிவகுமார் பள்ளிக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார். மாணவர்களின் பைகளை சோதனையிட்ட பின்னரே வகுப்பறைக்குள் அனுமதிக்க வேண்டும் என்றும், சம்பவம் நடைபெற்ற வகுப்பறையில் படிக்கும் மாணவர்களுக்கு மன ரீதியிலான கவுன்சிலிங் வழங்கவும் அவர் அறிவுறுத்தியிருந்தார். இந்நிலையில் இப்பள்ளிக்கு நேற்று வந்த மாணவர்களின் புத்தக பைகளை ஆசிரியர்கள் சோதனை யிட்டனர்.

x