சென்னை: சனாதனவாதிகளை எதிர்ப்பதில் வெற்றி காணும் தமிழ்நாடு அரசு சாதியவாதிகளிடம் ஏன் தோற்றுப் போகிறது?' என விசிக எம்.பி ரவிக்குமார் தெரிவித்துள்ளார்
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ‘சனாதனவாதிகளை எதிர்ப்பதில் வெற்றி காணும் தமிழ்நாடு அரசு சாதியவாதிகளிடம் ஏன் தோற்றுப் போகிறது?' எனத் தெரிவித்துள்ளார்
நெல்லை மாவட்டம் நாங்குநேரி பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவர் சின்னத்துரை. இவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ப்ளஸ் டூ படித்துக் கொண்டிருந்தபோது சக மாணவர்களால் அரிவாளால் வெட்டப்பட்டு தாக்குதலுக்கு ஆளான சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. தற்போது கல்லூரி முதலாம் ஆண்டு படித்து வரும் அவர், மீண்டும் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இன்ஸ்டாகிராம் செயலி மூலம் அறிமுகமான நபர் ஒருவர், தங்களுக்கு திருமண அழைப்பிதழ் தரவேண்டும் என கூறி சின்னத்துரையை தனி இடத்துக்கு அழைத்ததாக கூறப்படுகிறது.
அதனை நம்பிச் சென்ற அவரை, நான்கு பேர் கொண்ட கும்பல் பணம் கேட்டுத் தாக்கியதாகவும் பணம் இல்லாத நிலையில், செல்போனை பறித்துச் சென்றதாகவும் கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட மாணவர் சின்னத்துரையிடம் இன்ஸ்டாகிராம் கணக்கு தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, பாஸ்வேர்டு மற்றும் மின்னஞ்சல் முகவரி உள்ளிட்டவை தனக்கு மறந்துவிட்டதாக சின்னத்துரை தெரிவித்ததாக காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.
கல்லூரி மாணவர் சின்னத்துரை மர்ம நபர்களால் தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், விசாரணைக்காக காவல்துறை இரண்டு தனிப்படைகளை அமைத்துள்ளது.