பவானியில் மாயமான மாணவிகள் 5 பேர் சமயபுரத்தில் மீட்பு: நடந்தது என்ன?


ஈரோடு: பவானி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நேற்று முன்தினம் 10ம் வகுப்பு இறுதித் தேர்வு எழுதி முடித்த மாணவிகள் 5 பேரை காணவில்லை என வரப்பெற்ற புகாரின் பேரில் பவானி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

இந்நிலையில், அவர்கள் 5 பேரும் திருச்சி மாவட்டத்தில் இருப்பதாக திருச்சி மாவட்ட எஸ்.பி. செ.செல்வ நாகரத்தினத்தைத் தொடர்பு கொண்டு ஈரோடு மாவட்ட எஸ்.பி. ஏ.சுஜாதா தகவல் தெரிவித்தார். இதையடுத்து, திருச்சி மாவட்ட எஸ்.பி. செல்வ நாகரத்தினம், திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து போலீஸ் வாட்ஸ்-அப் குழுக்களிலும் மாணவிகளின் படத்தைப் பகிர்ந்து, அவர்களை கண்டுபிடிக்க அறிவுறுத்தினார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவு சமயபுரம் பேருந்து நிறுத்தம் பகுதியில் நின்று கொண்டிருந்த மாணவிகள் 5 பேரையும், ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த சமயபுரம் ஆய்வாளர் வீரமணி மீட்டு, சமயபுரம் திருவிழாவுக்காக அமைக்கப்பட்ட பிரத்யேக கட்டுப்பாட்டு அறைக்கு அழைத்துச் சென்று அங்கு பணியில் இருந்த பெண் காவல் ஆய்வாளர் ஜெயசித்ராவிடம் ஒப்படைத்தார்.

விசாரணையில் அவர்கள் பவானியில் இருந்து சமயபுரம் தேரோட்டத்தைப் பார்க்க வந்ததாகத் தெரிவித்துள்ளனர். இதைத்தொடர்ந்து, ஈரோடு மாவட்ட போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, பவானி காவல் உதவி ஆய்வாளர் பகவதி அம்மாள் உள்ளிட்டோர் நேற்று அதிகாலை திருச்சி வந்தனர். அவரிடம் மாணவிகள் 5 பேரையும் திருச்சி போலீஸார் ஒப்படைத்தனர்.

பள்ளி மாணவிகள் காணாமல் போனது தொடர்பாக ஈரோடு மாவட்டத்தில் இருந்து தகவல் கிடைக்கப் பெற்ற 3 மணி நேரத்தில், அவர்களை மீட்ட போலீஸாரை, திருச்சி எஸ்.பி.செல்வநாகரத்தினம், ஈரோடு எஸ்.பி. சுஜாதா ஆகியோர் பாராட்டினர்.

x