சென்னை: டாஸ்மாக் அலுவலகத்தில் நடந்த சோதனை மூலமாக, ரூ.1,000 கோடிக்கு மேல் சட்டவிரோத பணப் பரிமாற்றம் நடந்திருப்பது ஆதாரப்பூர்வமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என உயர் நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது.
சென்னையில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் அமலாக்கத் துறை அதிகாரிகள் கடந்த மார்ச் மாதம் நடத்திய தொடர் சோதனை சட்ட விரோதம் என அறிவிக்க கோரியும், விசாரணை என்ற பெயரில் அதிகாரிகளை துன்புறுத்த கூடாது என உத்தரவிட கோரியும் தமிழக அரசு மற்றும் டாஸ்மாக் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.
நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், கே.ராஜசேகர் அமர்வில் இந்த வழக்குகள் மீதான தொடர் விசாரணை நேற்று நடைபெற்றது. அப்போது, அமலாக்கத் துறை தரப்பில் ஆஜரான சிறப்பு அரசு வழக்கறிஞர் என்.ரமேஷ், டாஸ்மாக் அதிகாரிகளுக்கு எதிராக தமிழக போலீஸாரால் பதியப்பட்ட 41 எப்ஐஆர் மற்றும் அமலாக்கத் துறை பதிவு செய்துள்ள இசிஐஆர் விவரங்களையும், சோதனை தொடர்பான விவரங்களையும் அறிக்கையாக சீலிட்ட கவரில் தாக்கல் செய்தார்.
அப்போது டாஸ்மாக் தரப்பில் மூத்த வழக்கறிஞர் விக்ரம் சவுத்ரியும், அரசு தரப்பில் தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமனும் ஆஜராகி, ‘‘அமலாக்கத் துறை விசாரணையில் ஒருபோதும் வெளிப்படைத்தன்மை இல்லை. தமிழக அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் நோக்கிலேயே இந்த விசாரணை நடந்துள்ளது’’ என்றனர்.
அதற்கு நீதிபதிகள், ‘‘ஊழலை ஒழிக்க வேண்டும் என்பதுதானே அரசின் நோக்கமாக இருக்க முடியும்’’ என்றனர். அதற்கு அரசு தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், ‘‘ஊழலை ஒழிப்பதில் மாற்று கருத்து இல்லை. ஆனால் அதை மாநில அரசே பார்த்துக்கொள்ளும்’’ என்றார்.
பின்னர் அமலாக்கத் துறை தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல்கள் எஸ்.வி.ராஜு, ஏஆர்எல். சுந்தரேசன் மற்றும் சிறப்பு அரசு வழக்கறிஞர் என். ரமேஷ் ஆகியோர் தங்களது வாதத்தில் கூறியதாவது: டாஸ்மாக்குக்கு எதிராக மாநில போலீஸார் பதிவு செய்துள்ள வழக்குகளின் அடிப்படையிலேயே இந்த சோதனை நடத்தப்பட்டது. டாஸ்மாக்கில் பணிபுரியும் ஒருவர் லஞ்சம் வாங்கினால் அதன் சங்கிலி தொடர் குறித்தும் முழு பி்ன்னணி குறித்தும் ஆராய வேண்டியது தான் எங்கள் வேலை. இதற்காகத்தான் டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் திடீர் சோதனை நடத்தினோம். அமைச்சர் செந்தி்ல் பாலாஜி தொடர்பான ஆவணங்களும் அங்கு உள்ளன என்பதால் தொடர் சோதனை நடத்தப்பட்டது.
இந்த சோதனை மூலமாக டாஸ்மாக்கில் ரூ.1,000 கோடிக்குமேல் சட்டவிரோத பணப் ரிமாற்றம் நடைபெற்று இருப்பதை ஆதாரப்பூர்வமாக கண்டுபிடித்துள்ளோம். டாஸ்மாக் டெண்டர், மதுபான கொள்முதல், பார் உரிமம் என அனைத்திலும் லஞ்ச லாவண்யம் நடந்துள்ளது. கூடுதல் விலைக்கு மதுபானங்கள் விற்கப்பட்டதை டாஸ்மாக் மேற்பார்வையாளர்களே ஒப்புக்கொண்டுள்ளனர். இதை மறைக்க உயர் அதிகாரிகளுக்கும் லஞ்சம் கொடுக்கப் பட்டுள்ளது. இதுதொடர்பான அனைத்து ஆவணங்களும் தலைமை அலுவலகத்தில் பத்திரப்படுத்தி வைக்கப்படும் என்பதால் அங்கு சோதனை நடத்தப்பட்டது. இவ்வாறு அவர்கள் கூறினர். இதையடுத்து இந்த வழக்கை நீதிபதிகள் இன்றைக்கு (ஏப்.17) தள்ளி வைத்துள்ளனர்.