மதுரை: அதிமுக-பாஜக கூட்டணியில் முரண்பாடு எதுவுமில்லை. இந்தக் கூட்டணியால் திமுகவுக்குத்தான் பயம் ஏற்பட்டுள்ளது என்று பாஜக மாநிலப் பொதுச் செயலாளர் ராம சீனிவாசன் கூறினார்.
மதுரையில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: நேஷனல் ஹெரால்ட் முறைகேடு வழக்கில் காங்கிரஸ் தலைவர்கள் சோனியா, ராகுல்காந்திக்கு எதிராக அமலாக்க த்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. இந்த வழக்கு தொடர்பாக பிரியங்கா காந்தியின் கணவர் ராபர்ட் வதேராவிடம் விசாரித்துள்ளனர். இந்த வழக்குக்கும், பாஜகவுக்கும் சம்பந்தம் இல்லை. இது பழிவாங்கும் நடவடிக்கையும் இல்லை. பாஜக ஆட்சிக்கு வரும் முன்பே சுப்பிரமணியன் சுவாமியால் தொடரப்பட்ட வழக்கு இது.
அமலாக்கத் துறை விசாரணையை யாரும் தடுக்க முடியாது. முறைகேடான பணப் பரிவர்த்தனை நடைபெற்றால், அமலாக்கத் துறை விசாரணை நடத்தும். செந்தில்பாலாஜி வழக்கில் மாநில காவல் துறைதான் வழக்குப் பதிவு செய்தது. அந்த வழக்கின் அடிப்படையில்தான் அமலாக்கத் துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
அதிமுக-பாஜக கூட்டணியில் முரண்பாடு எதுவுமில்லை. அதிமுக எப்போதும் பாஜகவின் நட்பு கட்சிதான். பாஜகவின் கொள்கைக்கு பலமுறை ஆதரவு தெரிவித்துள்ளது. ஏற்கெனவே இரு கட்சிகளும் பலமுறை கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்துள்ளன. இப்போது மீண்டும் கூட்டணி அமைத்துள்ளோம். இந்தக் கூட்டணியை எல்லோரும் ஏற்றுக் கொண்டுள்ளனர். காங்கிரஸ் கட்சியை எதிர்த்து தொடங்கிய கட்சி திமுக. மத்திய காங்கிரஸ் அரசு தமிழகத்தில் திமுக ஆட்சியை 2 முறை டிஸ்மிஸ் செய்தது. இப்போது இரு கட்சிகளும் கூட்டணி சேர்ந்துள்ளன.
திமுக கூட்டணியில் விரிசல்: அதிமுக-பாஜக கூட்டணியால் திமுகவுக்கு பயம் ஏற்பட்டுள்ளது. திமுக கூட்டணியில் விரைவில் விரிசல் உண்டாகும். அப்போது திமுகவுக்கு மேலும் பயம் அதிகரிக்கும். சினிமாவில் இருந்து அரசியலுக்கு வந்தவர்களில் எம்ஜிஆர், என்டிஆர் தவிர வேறு யாராலும் வெற்றிபெற முடியவில்லை.
விஜயகாந்த் வந்தார், அவரால் முழுமையாக வெற்றிபெற முடியவில்லை. கமலால் வெற்றிபெற முடியாது. அந்த வகையில் விஜய் தொடங்கியுள்ள கட்சியாலும் வெற்றி பெற முடியாது. இந்த யதார்த்தம் அவருக்குப் புரியும். விஜய் அரசியலில் இருப்பது பாஜகவுக்கு நல்லது. திமுக கூட்டணிக் கட்சிகளின் வாக்குகளைத்தான் விஜய் பிரிப்பார். இவ்வாறு அவர் கூறினார்.