திண்டுக்கல் அருகே அங்கன்வாடியில் குழந்தைக்கு சூடு: பணியாளர், உதவியாளர் சஸ்பெண்ட்


திண்டுக்கல்: கன்னிவாடி அருகே அங்கன்வாடி மையத்தில் குழந்தைக்கு மைய உதவியாளர் சூடு வைத்தது தொடர்பாக விசாரணை நடத்திய அதிகாரி இருவரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி அருகே சுரக்காபட்டியை சேர்ந்த கூலித் தொழிலாளி ராஜபாண்டி மகள் தர்ஷிகா ஸ்ரீ (2). கிராமத்தில் உள்ள அங்கன்வாடி மையத்துக்கு சென்று வந்துள்ளார். அங்கன்வாடி மையத்தில் தர்மத்துப் பட்டியை சேர்ந்த பாப்பாத்தி பணியாளராகவும், சுரக்கா பட்டியை சேர்ந்த செல்லம்மாள் உதவியாளராகவும் பணிபுரிந்து வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் வீட்டுக்கு வந்த தர்ஷிகா ஸ்ரீ ஆயா சூடு வைத்து விட்டதாக தனது தாயார் சினேகாவிடம் கூறியுள்ளார். நேற்று காலை உதவியாளர் செல்லம்மாள் வீட்டுக்குச் சென்று கேட்டபோது, ‘உங்கள் குழந்தை சேட்டை செய்ததால் சூடு வைத்தேன்’ எனக் கூறியுள்ளார். இதையடுத்து குழந்தையின் தந்தை ராஜ பாண்டி கன்னிவாடி போலீஸில் புகார் அளித்தார்.

தகவலறிந்த ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அதிகாரிகள் நடந்த நிகழ்வு குறித்து பணியாளர்களிடம் விசாரணை நடத்தினார். இதையடுத்து அங்கன்வாடி பணியாளர் பாப்பாத்தி, உதவியாளர் செல்லம்மாள் ஆகியோரை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட திட்ட அலுவலர் பூங்கொடி உத்தரவிட்டார்.

x