திண்டுக்கல்: சிறுமலை மலைச்சாலையில் வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் , காந்தி கிராம பல்கலைக் கழகத்தில் பயிலும் 24 மாணவர்கள் உள்ளிட்ட 27 பேர் காயமடைந்தனர்.
திண்டுக்கல் அருகே காந்தி கிராமத்தில் உள்ள காந்தி கிராம பல்கலைக் கழகத்தில் கணினி அறிவியல் 2ம் ஆண்டு படிக்கும் மாணவர்கள் 24 பேர் உள்ளிட்ட 27 பேர், திண்டுக்கல் அருகேயுள்ள சிறுமலைக்கு நேற்று சென்றுள்ளனர். அங்கு பணிகளை முடித்துவிட்டு நேற்று மாலை வேனில் காந்தி கிராமம் திரும்பிக் கொண்டிருந்தனர்.
சிறுமலை மலைச்சாலை 3-வது கொண்டை ஊசி வளைவில் வேன் சென்று கொண்டிருந்தபோது, ஓட்டுநர் நாகராஜ் (33) ன் கட்டுப்பாட்டை இழந்து அருகிலுள்ள 50 அடி பள்ளத்தில் வேன் கவிழ்ந்தது. இதில் ஓட்டுநர் நாகராஜ், மாணவர் வினித் (19) ஆகியோர் படுகாயமடைந்தனர். மற்ற மாணவர்களுக்கு லேசான காயம் ஏற்பட்டது.
விபத்தில் சிக்கியவர்களை மீட்டு திண்டுக்கல் அருசு மருத்துவக் கல்லூரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மாணவர்களை திண்டுக்கல் எம்.பி. ஆர்.சச்சிதானந்தம், ஆட்சியர் செ.சரவணன், மேயர் இளமதி ஆகியோர் நலம் விசாரித்தனர். விபத்து குறித்து திண்டுக்கல் தாலுகா போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரண நடத்தி வருகின்றனர்.