மே 1ம் தேதி முதல் மேட்டுப்பாளையம் - குன்னூர் சாலை ஒரு வழிப்பாதையாக மாற்றம்!


படம்: ஆர்.டி.சிவசங்கர்

ஊட்டி: கோடை சீசனையொட்டி மே 1ம் தேதி முதல் மேட்டுப்பாளையம்-குன்னூர் சாலை ஒருவழிப்பாதையாக மாற்றப்பட உள்ளதாக காவல் கண்காணிப் பாளர் என்.எஸ்.நிஷா தெரிவித்தார்.

ஊட்டி நகரில் போக்குவரத்து சீரமைப்புப் பணிகளில் ஈடுபடும் போலீஸாரின் வசதிக்காக தனியார் நிறுவனத்தின் சிஎஸ்ஆர் நிதியில் ரூ.8 லட்சம் மதிப்பிலான பேரிகார்டுகள் மற்றும் நிழற்குடைகள் வழங்கப்பட்டன. இவற்றை காவலர்களின் பயன்பாட்டுக்காக மாவட்ட காவல் கண்கணிப் பாளர் என்.எஸ்.நிஷா நேற்று தொடங்கி வைத்தார்.

அதன் பின் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: நீலகிரி மாவட்ட போக்குவரத்து மேலாண்மைக்காக தனியார் நிறுவனத்தால் 50 பேரிகார்டுகள் மற்றும் 10 நிழற்குடைகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த நிழற்குடைகள் ஊட்டி நகரின் முக்கிய சந்திப்புகளில் அமைக்கப்படும். மழை, வெயில் காலங்களில் பணிபுரியும் காவலர்களுக்கு இவை உதவியாக இருக்கும். கோடை சீசன் தொடங்க உள்ளதால், போக்குவரத்து விதிமுறைகளை கடை பிடித்து காவல் துறையினருக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

கோடை காலத்தையொட்டி, போக்குவரத்து மேலாண்மைக்காக அனைத்து துறையினருடனான ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் நடத்தப்பட்டது. இதில், சீசன் சமயத்தில் சுற்றுப் பேருந்துகள் இயக்குவது, பார்க்கிங் பகுதிகளை கண்டறிவது, ஊட்டி நகரில் மேற்கொள்ள வேண்டிய போக்கு வரத்து மாற்றங்கள் உட்பட பல்வேறு நடவடிக்கைகள் குறித்து விவாதித்து, அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன.

இந்தாண்டு மாவட்டத்துக்கு வாகனங்கள் வர கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளதால், ஒரு வழிப்பாதை திட்டம் கூட்டத்தை பொறுத்து முடிவெடுக்கப்படும். மே 1ம் தேதி முதல் ஒரு வழிப்பாதை அமல்படுத்தப்படும். கோடை காலத்தில் வரும் வாகனங்களை நிறுத்த பார்க்கிங் இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

வெளி மாவட்டங்களில் இருந்தும் போலீஸார் வரவழைக்கப்பட்டு, போக்குவரத்து மேலாண்மையில் ஈடுபடுத்தப் பட்டு உள்ளனர். சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரிக்கும் பட்சத்தில் கூடுதலான போலீஸார் பாதுகாப்புப் பணியமர்த்தப்படுவர், என்றார். நிகழ்வில், நகர காவல் துணை கண்காணிப்பாளர் நவீன் குமார், போக்கு வரத்து ஆய்வாளர் வனிதா, காவல் உதவி ஆய்வாளர் அருண் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

x