மதுரை: “கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் இடத்தில் கழிவுநீர் கலப்பதை தடுக்க வேண்டும். சென்னையில் நடைபெறும் விழாக்களுக்கு தரும் முக்கியத்துவத்தைபோல் உயரதிகாரி தலைமையில் குழு அமைத்து மதுரையில் சித்திரைத் திருவிழாவை நடத்த வேண்டும்,” என்று தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் கூறியுள்ளார்.
மதுரையில் ஆழ்வார்புரம் வைகை ஆற்றில் கள்ளழகர் வைகையில் இறங்கும் இடத்தில் கழிவுநீர் கால்வாய் கலக்கும் இடத்தை இன்று (ஏப்.16) தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர் பாண்டியன் தலைமையில் நேரில் கள ஆய்வு செய்தனர். பின்னர், பி.ஆர்.பாண்டியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: “திமுக 2021 தேர்தல் அறிக்கையில் மதுரையை மையமாக வைத்து புதிய வேளாண் பல்கலைக்கழகம் அமைக்கப்படும் என்று வாக்குறுதி அளித்தது. ஆனால், இதுவரை அதை நிறைவேற்றாதது ஏமாற்றம் அளிக்கிறது. உடனடியாக பல்கலைக்கழகம் துவங்க வேண்டும்.
வைகை ஆற்றில் 72 இடங்களில் மதுரை மாநகர கழிவுநீர் முழுமையாக கலக்கிறது. இதனை தடுக்க உயர்மட்டக்குழு அமைத்து ஆய்வு செய்ய வேண்டும். மாறாக மக்கள் மீது குற்றம் சுமத்துவதை கைவிட வேண்டும். சென்னையில் நடைபெறும் நிகழ்ச்சிகளுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தைப்போல் மதுரை உள்ளிட்ட மற்ற மாவட்டங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளுக்கும் அரசு உரிய முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
அதன்படி தென் மாவட்டங்களிலிருந்து லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்கும் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் திருவிழா ஏற்பாடுகளை தமிழக அரசு உயரதிகாரி தலைமையில் குழு அமைத்து சித்திரைத் திருவிழாவை நடத்த வேண்டும். கூட்ட நெரிசலில் கடந்த சில ஆண்டுகளாக தொடரும் உயிரிழப்புகளை தடுக்க தமிழக அரசு முன்வர வேண்டும்.மேலும், வைகை அணையை சேது சமுத்திர கால்வாய் திட்டத்தில் பயன்படுத்திய நீர்மூழ்கி மண் அள்ளும் இயந்திரங்கள் மூலம் தூர்வார வேண்டும்.
வைகை, தாமிரபரணி பேச்சிப்பாறை பெருஞ்சாணி உள்ளிட்ட நீர்ப்பாசன திட்ட பராமரிப்புக்கு 4 ஆண்டாக திமுக அரசு ஒரு ரூபாய் கூட நிதி ஒதுக்கவில்லை. நெடுஞ்சாலைத்துறைக்கு கொடுக்கும் முன்னுரிமையை நீர்ப்பாசனத்துறைக்கு கொடுக்க வேண்டும். கன்னியாகுமரியில் மாவட்ட ஆட்சியர், வெளி மாநிலங்களுக்கு கனிமவளம் கடத்துவதற்கு ஆதரவாக லாரிகளை தடை செய்யக்கூடாது என காவல்துறைக்கு கடிதம் அளித்தது அதிர்ச்சி அளிக்கிறது. இது குறித்து முதல்வர் விளக்கம் அளிக்க வேண்டும்,” என்று அவர் கூறினார்.
அப்போது, மாநில கவுரவத் தலைவர் எம்.பி.ராமன், தென் மண்டல தலைவர் கட்டிக்குளம் மாணிக்கவாசகம், மாநில இளைஞரணி தலைவர் அருண், முல்லைப் பெரியாறு வைகை விவசாயிகள் சங்க செயலாளர் எல்.ஆதிமூலம், மாவட்டத் தலைவர் அழகு, செயலாளர் பொன்.மணிகண்டன் உட்பட பலர் பங்கேற்றனர்.