தஞ்சாவூர்: டெல்டா மாவட்டங்களில் கடமைக்காக நடைபெறும் தூர் வாரும் பணிகள் முறையாக கண்காணித்து, கடைமடை வரை தண்ணீர் செல்வதை அதிகாரிகள் உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
காவிரி டெல்டா மாவட்டங்களில் சாகுபடிக்காக ஆண்டுதோறும் ஜூன் 12ம் தேதி மேட்டூர் அணையில் தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். கடைமடை வரையிலும், அனைத்து பிரிவு நீர்நிலைகளிலும் தண்ணீர் செல்ல வேண்டும் என்பதற்காக ஒவ்வொரு ஆண்டும் சிறப்பு தூர் வாரும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த ஆண்டு தஞ்சாவூரில் 1,379.18 கி.மீ தொலைவுக்கு ரூ.26.20 கோடியில் தூர் வாரும் பணிகள் நடைபெற உள்ளன. இந்த நிலையில், தூர் வாரும் பணியை விரைந்து தொடங்கி தரமான முறையில் பணிகளை மேற்கொள்ள வேண்டும். மேலும், பழைய அளவீட்டின் படி வாய்க்கால்கள், குளங்கள் உள்ளிட்ட நீர் நிலைகளை அளவீடு செய்து, அதன்படி தூர் வார வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
இது தொடர்பாகத் தமிழ்நாடு காவிரி விவசாயிகள் பாதுகாப்புச் சங்கச் செயலாளர் சுவாமிமலை சுந்தர விமலநாதன் கூறியது: 1996ம் ஆண்டு அப்போதைய முதல்வர் கருணாநிதி பாபநாசம் வட்டம் மேட்டுத் தெருவில் உள்ள மண்ணியாற்றில் தூர்வாரும் பணியை தொடங்கி வைத்தனர். அப்போது உரிய அளவீட்டின்படி, பணிகளை தரமாக மேற்கொள்ளப்பட்டதால் கடைமடை வரை தண்ணீர் சென்றது. அதன் பிறகு, பல ஆண்டுகளாக தூர்வாரும் பணிகள் கடமைக்காக நடைபெற்று வருகின்றன. இதனால் தூர்வாரும் பணிகள் முடிந்து சில நாட்களில் மழை பெய்தால், மீண்டும் அந்தப் பகுதிகளில் மண் நிரம்பி நீர் செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது.
தூர்வாரும் பணியை நீர் வளத்துறை முதன்மைச் செயலாளர் நேரில் பார்வையிட்டு பணிகள் முறையாக நடைபெறுகிறதா என தொடர்ந்து கண்காணிப்பதுடன், கடைமடை வரை தண்ணீர் செல்கிறதா என்பதை உறுதிப்படுத்த வேண்டும். அந்தந்தப் பகுதி விவசாயிகளிடம், அவர் கலந்துரையாடினால் தான், தூர் வாரும் பணிகளின் தரம் குறித்துத் தெளிவுபடுத்த முடியும். அப்போது தான் தூர் வாரும் பணி தரமாக நடைபெறும். ஆனால் நீர் வளத்துறை அதிகாரிகள் ஆய்வுக்கு வரும்போது தூர்வாரிய ஒரு இடத்தை மட்டும் பார்த்து விட்டு, அனைத்து பணிகளும் முறையாக நடந்துள்ளது எனக் கூறிவிட்டு சென்றுவிடுகின்றனர்.
எனவே, தூர்வாரும் பணி முறையாக நடைபெற வேண்டுமானால், 1923-ம் ஆண்டு வருவாய்த் துறை பதிவேட்டின் படி, அளவீடு செய்து அதன்படி பணியை மேற்கொள்ள வேண்டும். அப்போது நீர் நிலைகளில் ஆக்கிரமிப்புகள் இருந்தால் தயவுதாட்சண்யமின்றி அகற்ற வேண்டும் என்றார். இதுதொடர்பாக நீர் வளத்துறை அதிகாரிகள் கூறியது: தூர்வாரும் பணிகள் உரிய அளவீட்டின் படி நடைபெறும். அமைச்சர் தேதி கிடைத்தவுடன், விரைவில் இந்தப் பணிகள் தொடங்கும் எனத் தெரிவித்தனர்.