தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் குரங்குகள் தொல்லை: அச்சத்தில் நோயாளிகள்


படங்கள்: ஆர்.வெங்கடேஷ்

தஞ்சாவூர்: மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உலா வரும் குரங்குகளால், மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள், பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். இந்த குரங்குகளை வனத்துறையினர் பிடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு தினமும் வெளிநோயாளிகளாக 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களும், உள்நோயாளிகளாக ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த மருத்துவமனை வளாகத்தில் ஏற்கெனவே நூற்றுக்கும் மேற்பட்ட நாய்கள் சுற்றி வருவதால், பொதுமக்கள் அச்சமடைந்துள்ள நிலையில், தற்போது குரங்குகளும் உலா வருகின்றனர். இவை பொதுமக்கள் காத்திருப்பு கூடம், உள்நோயாளிகள் சிகிச்சை பெறும் பகுதிகள், வாகனங்கள் நிறுத்துமிடம் என பல இடங்களிலும் சர்வசாதாரணமாக சுற்றி வருவதுடன், பொதுமக்கள் வைத்திருக்கும் உணவு பொருட்களை பறித்துச் சென்று விடுகின்றன. அவற்றை விரட்டி முயன்றால், கடிப்பது போல துரத்துவதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

இது குறித்து மருத்துவர்களிடம் கேட்டபோது, ”தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் கடந்த சில மாதங்களாக குரங்குகள் அதிகமாக உள்ளது. இதனால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளதால், அவற்றை பிடிக்க வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.

இதுகுறித்து தஞ்சாவூர் வனச்சரக அலுவலர் கே.ரஞ்சித்திடம் கேட்டபோது, ”தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் குரங்குகள் நடமாட்டம் குறித்து இதுவரை எந்தப் புகாரும் வரவில்லை. புகார் வந்தால் குரங்குகளை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

x