பெண் தூய்மை பணியாளரை செருப்பால் அடித்த ஆய்வக ஊழியர்: அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனை பரபரப்பு


அருப்புக்கோட்டை: அரசு மருத்துவமனையில் பெண் துப்புரவுப் பணியாளரை ஆய்வக ஊழியர் காலணியால் தாக்கினார். இதனால் ஆத்திரமடைந்த துப்புரவுப் பணியாளர்கள் திரண்டு வந்து ஆய்வக ஊழியரை சரமாரியாக தாக்கினர்.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் ஒப்பந்த அடிப்படையில் நூற்றுக்கும் மேற்பட்ட துப்புரவுப் பணியாளர்கள் பணியில் உள்ளனர். நேற்று அரசு மருத்துவமனை எக்ஸ்-ரே அறையில் துப்புரவுப் பணியாளர் உமா மகேஸ்வரி பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, சரியாகச் சுத்தம் செய்யுமாறு ஆய்வக தொழில்நுட்ப உதவியாளர் ராஜ் கூறினார். இதனால், இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

திடீரென ராஜ் தனது காலணியால் உமா மகேஸ்வரியை தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதனால், உமா மகேஸ்வரி அழுது கொண்டே அறையில் இருந்து வெளியேறினார். இதைப் பார்த்த மற்ற துப்புரவுப் பணியாளர்கள், அவரிடம் விசாரித்த போது, நடந்த சம்பவத்தை உமா மகேஸ்வரி கூறினார்.

ஆத்திரமடைந்த மருத்துவமனை துப்புரவுப் பணியாளர்கள் திரண்டுவந்து எக்ஸ்-ரே ஆய்வக தொழில் நுட்ப உதவியாளர் ராஜை சரமாரியாகத் தாக்கினர். மற்ற மருத்துவ அலுவலர்கள் ராஜை மீட்டுச் சென்றனர்.

பெண் துப்புரவுப் பணியாளர் தாக்கப்பட்டதைக் கண்டித்து அனைத்து துப்புரவுப் பணியாளர்களும் நேற்று வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து அருப்புக்கோட்டை நகர் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

x