கிருஷ்ணகிரி: சிட்கோ தொழிற்பேட்டை வளாகம் மது அருந்தும் கூடாரமாக மாறி வருவதால், பொதுமக்கள் வேதனை அடைந்துள்ளனர்.
கிருஷ்ணகிரியில் பெங்களூரு சாலையில் சிட்கோ தொழிற்பேட்டை உள்ளது. இங்கு 50-க்கும் மேற்பட்ட சிறு குறு தொழிற்சாலைகள் உள்ளன. இந்த வளாகத்துக்கு வந்து செல்ல 4 இடங்களில் வழிகள் உள்ளன. மேலும், தொழிற்பேட்டையின் ஒரு பகுதியில் சில தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன. இதனால், இப்பகுதியில் ஆட்கள் நடமாட்டம் இருப்பதில்லை. இதைப் பயன்படுத்தி அப்பகுதியில் தினசரி 50-க்கும் மேற்பட்டோர் மது அருந்தும் பாராகப் பயன்படுத்தி வருவதோடு, மது அருந்தி விட்டு அவ்வழியாகச் செல்வோரிடம் தகராறில் ஈடுபட்டு வருவதோடு, மது பாட்டில்களை அங்கேயே உடைத்து வீசி வருகின்றனர்.
இது தொடர்பாக அப்பகுதியில் தொழிற்சாலை நடத்துவோர் மற்றும் தொழிலாளர்கள் சிலர் கூறியதாவது: கிருஷ்ணகிரி தொழிற்பேட்டைக்குத் தினசரி 100-க்கும் மேற்பட்டவர்கள் வேலைக்கு வந்து செல்கிறோம். பகலில் சாலையில் அமர்ந்து சிலர் மது அருந்துகின்றனர். இதனால், இவ்வழியாக ச் செல்லும் பெண்கள் அச்சத்துடன் செல்கின்றனர். கூட்டம் கூட்டமாக வரும் அவர்கள், கையில் சமையல் காஸ், அடுப்பு உள்ளிட்டவற்றை எடுத்து வந்து இறைச்சியைச் சமைத்தும் சாப்பிட்டு விட்டுச் செல்கின்றனர்.
கழிவுகளை அங்கேயே கொட்டி செல்கின்றனர். இது தொடர்பாக கேட்டால் தகராறு செய்கின்றனர். காவல் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. மேலும், திருட்டு தொல்லையும் அதிகரித்துள்ளது. இது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.