நெல்லையப்பர் கோயில் சொத்துக்களை மீட்க வழக்கு: வருவாய்த் துறை செயலர்கள் பதிலளிக்க உத்தரவு


திருநெல்வேலி: நெல்லையப்பர் கோயில் சொத்துக்களை மீட்கக்கோரிய வழக்கில் உள்துறை, வருவாய்த் துறை செயலர்கள் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சேலம் மேட்டு அக்ரஹாரத்தை சேர்ந்த ராதாகிருஷ்ணன், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனு: திருநெல்வேலியில் உள்ள நெல்லையப்பர் கோயிலுக்கு சொந்தமாக 1,970 ஏக்கர் ஈர நிலமும் 6,375 ஏக்கர் வறண்ட நிலமும் உள்ளது. கோயில் நிலத்தில் 53.59 ஏக்கரை தங்கள் பயன்பாட்டுக்கு வழங்குமாறு மின் தொகுப்புக் கழகம் கேட்டது. இந்த நிலத்துக்காக நெல்லையப்பர் கோயில் நிர்வாகத்துக்கு மின் தொகுப்புக் கழகம் 1 கோடியே 60 லட்சத்து 77 ஆயிரம் ரூபாய் டெபாசிட் செய்யப்பட்டது. இந்த இழப்பீட்டுத் தொகை மிகவும் குறைவு.

குறைவாக இழப்பீட்டு தொகை வழங்கியதுடன் கோயிலுக்குச் சொந்தமான 306.36 ஏக்கர் நிலத்தை அனுமதி பெறாமல் ஆக்கிரமித்துள்ளனர். ஆக்கிரமிக்கப்பட்ட கோயில் நிலங்களை மீட்கக்கோரி அதிகாரிகளுக்கு மனு அனுப்பியும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே நெல்லையப்பர் கோயிலுக்கு சொந்தமான சொத்துக்களை மீட்டு முறையாக பராமரிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை நீதிபதிகள் ஜெயச்சந்திரன், ஸ்ரீமதி அமர்வு விசாரித்தது. பின்னர் நீதிபதிகள், கோயில் நிலம் ஆக்கிரமிப்பு தொடர்பாக ஏற்கெனவே வழக்கு தொடரப்பட்டுள்ளது. எனவே, நெல்லையப்பர் கோயிலுக்குச் சொந்தமான சொத்துக்கள் மற்றும் அவற்றின் பராமரிப்பு குறித்து தமிழக உள்துறை மற்றும் வருவாய்த் துறை செயலர்கள், இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை ஜூன் 4ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

x