மதுரை: வக்பு சட்ட திருத்தத்தை முன்னிறுத்தி இந்துக்கள்-முஸ்லிம்களி டையே கலவரத்தைத் தூண்டி 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற திமுக கூட்டணிக் கட்சிகள் சதி செய்வதாக பாஜக சிறுபான்மைப் பிரிவு தேசியத் தலைவர் வேலூர் இப்ராஹிம் கூறினார்.
திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் பாஜக சார்பில் வக்பு சட்டத் திருத்த ஆதரவு பொதுக்கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் பங்கேற்பதற்காக மதுரை வந்த வேலூர் இப்ராஹிம், அங்கிருந்து நத்தம் புறப்பட்டபோது போலீஸார் தடுத்து நிறுத்தினர்.
தொடர்ந்து, செய்தியாளர்களிடம் வேலூர் இப்ராஹிம் கூறியதாவது: மத்திய அரசின் வக்பு சட்டத் திருத்தத்தால் வக்பு வாரிய சொத்துகள் பாதுகாக்கப்படும். முஸ்லிம்களுக்கும் பலன் கிடைக்கும். ஆனால், வக்பு சட்டத் திருத்தம் முஸ்லிம்களுக்கு எதிரானது என திமுகவும், அதன் கூட்டணிக் கட்சிகளும் பிரச்சாரம் செய்து வருகின்றன. இந்த சட்டத்துக்கு எதிராகப் போராடுமாறு முஸ்லிம்களை முதல்வர் ஸ்டாலின் மற்றும் திமுக கூட்டணிக் கட்சியினர் தூண்டி வருகின்றனர்.
வாக்கு வங்கி அரசியல்... எனவே, பாஜக சார்பில் வக்பு சட்டத் திருத்தத்துக்கு ஆதரவாக கூட்டங்கள் நடத்தப்பட்டு, முஸ்லிம்களிடம் சட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இந்தக் கூட்டங்களில் பேசுவதற்காகச் செல்லும் என்னை போலீஸார் தொடர்ந்து கைது செய்து வருகின்றனர். பாஜகவினர் முறையாக அனுமதி பெற்று கூட்டங்களை நடத்தி வருகின்றனர். இதில் என்னை பங்கேற்க விடாமல் தடுத்து, அற்பமான வாக்கு வங்கி அரசியலை தமிழக முதல்வர் மேற்கொண்டு வருகிறார்.
பாஜக வேடிக்கை பார்க்காது: தமிழகம் முழுக்க இந்துக்கள், முஸ்லிம்கள் மத்தியில் கலவரத்தை ஏற்படுத்தி 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற திமுகவும், அதன் கூட்டணிக் கட்சிகளும் திட்டமிட்டுள்ளன. இதை பாஜக வேடிக்கைப் பார்க்காது. தமிழகம் முழுக்க வக்பு சொத்துகள் ஆளும் கட்சியினரிடம் உள்ளன.
மேற்கு வங்கம், மத்திய பிரதேசம், அசாம் மாநிலங்களில் வக்பு சட்டத் திருத்தத்துக்கு எதிராக முஸ்லிம்களை போராடத் தூண்டி வருகின்றனர். இதனால் அங்கு வன்முறை நிகழ்ந்துள்ளது. அதேபோல, அமைதிப் பூங்காவான தமிழகத்திலும் கலவரத்தை தூண்ட சதி செய்து வருகின்றனர். திமுக ஆட்சியை முடிவுக்கு கொண்டு வருவதுதான் பாஜகவின் வேலை. இவ்வாறு வேலூர் இப்ராஹிம் கூறினார்.