திருப்பத்தூர்: நாட்றம்பள்ளி அடுத்த ஆவாரங்குப்பம் பகுதியில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் மாணவர்கள் நீர்த்தேக்க தொட்டி மற்றும் பள்ளி வளாகத்தைச் சுத்தம் செய்யும் வீடியோ நேற்று வெளியாகி வைரல் ஆனது.
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஆவாரங்குப்பம் பகுதியில் ஊராட்சி ஒன்றிய அரசு நடுநிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இங்கு 400-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இந்நிலையில், பள்ளியின் ஆண்டு இறுதி தேர்வுகள் நடந்து வரும் நிலையில், தேர்வு எழுத வந்த மாணவர்களைப் பள்ளி வளாகம் மற்றும் அங்குள்ள குடிநீர்த் தொட்டிகளைச் சுத்தம் செய்ய ஆசிரியர்கள் கூறியதாகத் தெரிகிறது.
இதைத்தொடர்ந்து 7 மற்றும் 8-ம் வகுப்பு பயின்று வரும் மாணவர்கள் பள்ளி வளாகம் மற்றும் குடிநீர்த் தொட்டியைச் சுத்தம் செய்துள்ளனர். அதை வீடியோவாக எடுத்த ஒருவர் அதை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ நேற்று காலை வைரல் ஆனது. இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் சுத்தம் செய்ய உத்தரவிட்ட ஆசிரியர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
இதுகுறித்து பெற்றோர்கள் கூறும்போது, "ஆவாரங்குப்பம் பகுதியில் இயங்கி வரும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தற்போது பள்ளி இறுதி ஆண்டு தேர்வுகள் நடந்து வருகின்றன. 1 முதல் 5-ம் வகுப்பு மாணவர்களுக்கு நாளையுடன்(ஏப்.17-ம் தேதி) தேர்வுகள் முடிவடைய உள்ளன. பாக்கியுள்ள வகுப்புகளுக்கு ஏப்.24-ம் தேதியுடன் தேர்வுகள் முடிவடைகின்றன.
அதன் பிறகு பள்ளிக்கு விடுமுறை அறிவிக்கப்பட இருப்பதால் பள்ளி வளாகம் மற்றும் குடிநீர்த் தொட்டியைச் சுத்தம் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில், தேர்வு எழுத வந்த மாணவர்களையே ஆசிரியர்கள் தூய்மைப் பணி செய்ய உத்தரவிட்டுள்ளனர். இறுதி தேர்வுக்குத் தயாராகி வரும் மாணவர்களைப் படிக்க அறிவுறுத்தாமல் பள்ளி வளாகத்தையும், குடிநீர்த் தொட்டியைத் தூய்மை செய்யும் பணியில் மாணவர்களை ஈடுபடுத்தியது எங்களுக்குப் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தேர்வு எழுத ஆவலுடன் பள்ளிக்கு வரும் மாணவர்களைத் தேர்வுக்குப் படிக்க வைக்காமல் பள்ளியில் தூய்மைப்பணியில் ஈடுபடுத்தியிருப்பது மாணவர்களுக்கான கவனச் சிதறல் ஏற்படும் நிலையை ஆசிரியர்கள் உருவாக்கியுள்ளனர்.
ஒரு சில அரசுப்பள்ளி ஆசிரியர்களின் இது போன்ற செயல்களால் மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்த முடியாமல் போகிறது. ஆகவே, பள்ளிக்கல்வித் துறை சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றனர்.
இது குறித்து மாவட்ட கல்வித்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, "இதுகுறித்த பள்ளி ஆசிரியர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. விரைவில் அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்" என்றனர்.