பாஜகவுடனான தேர்தல் கூட்டணி மற்றும் இதர கட்சிகளை சேர்ப்பது உள்ளிட்டவை தொடர்பாக விவாதித்து முடிவெடுக்க மே-2-ம் தேதி அதிமுக செயற்குழு சென்னையில் கூடுகிறது.
அரசியல் கட்சிகளுக்கான விதிகளின்படி ஆண்டுதோறும் 6 மாதங்களுக்கு ஒரு முறை செயற்குழு கூட்டம் மற்றும் ஆண்டுக்கு ஒருமுறை பொதுக்குழு கூட்டம் நடத்தப்பட வேண்டும். இந்த கூட்டங்களில், கட்சியின் நிர்வாக ரீதியான மாற்றங்கள், முடிவுகளுக்கு ஒப்புதல் பெறப்படும். அந்த வகையில், அதிமுகவின் கடந்தாண்டுக்கான பொதுக்குழு கூட்டம் கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்றது. இந்நிலையில், இந்தாண்டுக்கான முதல் செயற்குழு கூட்டம், வரும் மே 2-ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பில், கூறியிருப்பதாவது: அதிமுக செயற்குழு வரும் மே2-ம் தேதி வெள்ளிக்கிழமை மாலை 4.30 மணிக்கு ராயப்பேட்டை, அவ்வை சண்முகம் சாலையில் உள்ள எம்ஜிஆர் மாளிகையில் அவைத் தலைவர் அ.தமிழ்மகன் உசேன் தலைமையில் நடைபெறும்.
செயற்குழு உறுப்பினர்களான தலைமைக்கழக செயலாளர்கள், மாவட்ட செயாலாளர்கள், பிற மாநில கழக செயலாளர்கள், நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்கள், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் (மகளிர்) அனைவருக்கும் தனித்தனியே அழைப்பிதழ் அனுப்பி வைக்கப்படும். தங்களுக்கான அழைப்பிதழோடு தவறாமல் வந்து செயற்குழு கூட்டத்தில் பங்கேற்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிமுகவின் இந்த செயற்குழு என்பது வழக்கமான ஒன்றாக இருந்தாலும், பாஜகவுடனான கூட்டணி அறிவிக்கப்பட்ட நிலையில் நடைபெறுவதால் முக்கியத்துவம் பெற்றுள்ளது. இக்கூட்டத்தில், சிறப்பு அழைப்பாளர்கள் இடம் பெறமாட்டார்கள். அந்த வகையில் 326 பேர் பங்கேற்பார்கள் என கூறப்படுகிறது.
மேலும், இக்கூட்டத்தில், பாஜக உடனான கூட்டணிக்கு ஒப்புதல், ஏற்கெனவே கூட்டணியில் இருந்த தேமுதிக, பாமக உள்ளிட்ட கட்சிகளை சட்டப்பேரவை தேர்தலுக்கான கூட்டணியில் சேர்ப்பதா, வேண்டாமா என்பது குறித்து விவாதிக்கப்படவுள்ளதாக தெரிகிறது. அதேபோல் பாஜக கூட்டணியால் அதிமுகவில் எழும் அதிருப்தி குரல்களை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்தும் இக்கூட்டத்தில் விவாதித்து முடிவெடுக்கப்படும் என கட்சி வட்டாரங்களில் கூறப்படுகிறது.