கோவை: சென்னையில் கடந்த 6-ம் தேதி நடந்த நிகழ்வில், வனத்துறை அமைச்சர் பொன்முடி கலந்து கொண்டு, இந்து மதம், பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். இதற்கு பல்வேறு தரப்பில் இருந்து கடும் எதிர்ப்பு எழுந்தது.
இதற்கிடையே, சர்ச்சைக்குரிய வகையில் பேசிய அமைச்சர் பொன்முடியை கைது செய்ய வேண்டும், அமைச்சர் பதவியில் இருந்து அவரை நீக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து முன்னணி இயக்கத்தின் மகளிர் பிரிவான, இந்து அன்னையர் முன்னணியின் சார்பில், கோவை தெற்கு தாலுகா அலுவலகம் அருகே செவ்வாய்க்கிழமை (ஏப்.15) மாலை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில், இந்து முன்னணி அமைப்பின் மாநில பொதுச்செயலாளர் ஜே.எஸ்.கிஷோர்குமார் பங்கேற்று சிறப்புரையாற்றினார். இந்து அன்னையர் முன்னணி மாவட்ட செயலாளர் மகேஸ்வரி பாரதி, இந்து முன்னணி மாவட்ட செய்தி தொடர்பாளர் சி.தனபால் மற்றும் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டு பேசினர். அவர்கள் பேசும்போது, ‘‘சர்ச்சைக்குரிய வகையில் பேசிய அமைச்சர் பொன்முடி, அவர் வகித்த கட்சிப் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
தொடர்ந்து சர்ச்சைக்குரிய வகையில் பேசும் அவரை அமைச்சர் பதவியில் இருந்தும் நீக்க வேண்டும். இந்து முன்னணி சார்பில், அமைச்சர் பொன்முடி மீது காவல் நிலையங்கள் புகார்கள் அளிக்கப்பட்டுள்ளன. அந்த புகார் மனுக்கள் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இனியும் தாமதிக்காமல் அளிக்கப்பட்ட புகாரின் மீது போலீஸார் நடவடிக்கை எடுக்க வேண்டும். அவரை கைது செய்ய வேண்டு்ம்’’ என்றனர். தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.