திருப்பத்தூர்: 7 வயது சிறுமியின் தொண்டைக்குழியில் சிக்கிய 5 ரூபாய் நாணயத்தை அரசு மருத்துவர்கள் நேற்று அகற்றி சிறுமியைக் காப்பாற்றினர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த சின்னபொன்னேரி பகுதியைச் சேர்ந்தவர் சிவா(33). இவரது மனைவி லலிதா(28). இவர்களுக்கு கனிஸ்ரீ (7) என்ற மகள் உள்ளார். இந்நிலையில், கனிஸ்ரீ வீட்டின் வெளியே நேற்று காலை விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த அவரது பாட்டி சரசாம்மாள் சிறுமியிடம் ஐந்து ரூபாய் நாணயத்தைக் கொடுத்து கடைக்குச் சென்று ஏதாவது வாங்கிக்கொள் எனக் கூறியதாகக் கூறப்படுகிறது.
ஐந்து ரூபாய் நாணயத்தைப் பெற்ற சிறுமி கனிஸ்ரீ எதிர்பாராத விதமாக அந்த நாணயத்தை வாயில் போட்டபோது அது சிறுமியின் தொண்டைக் குழியில் சிக்கிக் கொண்டது. இதனால், சிறுமி கத்தி கூச்சலிட்டு மயங்கி விழுந்தார். சிறுமியின் தொண்டையில் நாணயம் சிக்கியதை அறிந்த பெற்றோர் அதிரிச்சியடைந்தனர். உடனடியாக சிறுமியைத் திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றனர். அங்கு, காது, மூக்கு, தொண்டை நிபுணரான மருத்துவர் தீபானந்தன் விடுமுறையிலிருந்ததாக கூறப்படுகிறது.
இருப்பினும், சிறுமியின் ஆபத்தான நிலைமையை மருத்துவர் தீபானந்தனுக்கு தொலைப்பேசி வாயிலாகத் தெரிவிக்கப் பட்டதைத் தொடர்ந்து அவர் உடனடியாக மருத்துவமனைக்கு விரைந்து வந்து 5 ரூபாய் நாணயத்தை விழுங்கிய சிறுமிக்குத் தேவையான சிகிச்சைகளைத் தொடங்கினார். அரை மணி நேரத்தில் சிறுமியின் தொண்டைக்குழியில் குழாய் செலுத்தி(என்டோஸ்கோபி மூலம்), அங்குச் சிக்கியிருந்த 5 ரூபாய் நாணயத்தை மருத்துவர்கள் அகற்றினர்.
இதையடுத்து, சிறுமி கனி ஸ்ரீ பெரிய ஆபத்தைக் கடந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து, பெற்றோர் நிம்மதி அடைந்தனர். விடுப்பிலிருந்த போதும் மருத்துவமனைக்கு வந்து சிறுமியை காப்பாற்றிய மருத்துவர் தீபானந்தன் மற்றும் மருத்துவக்குழுவினுக்கு நன்றி தெரிவித்தனர்.