பெரம்பலூர்: குன்னம்அருகே தெரு நாய்கள் கடித்து காயப்படுத்தி வருவதால் பொதுமக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர்.
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் கள்ளை கிராமத்தைச் சேர்ந்த முனியமுத்து மகள் புவனேஸ்வரி (14). பேரளி கிராமத்தில் உள்ள கஸ்தூரிபா காந்தி பாலிகா வித்யாலயா உண்டு உறைவிடப் பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வருகிறார். ஏப்.12ம் தேதி பிற்பகல் பள்ளி வராண்டாவில் அமர்ந்து படித்துக் கொண்டிருந்தபோது, பள்ளி வளாகத்துக்குள் புகுந்த வெறி நாய் புவனேஸ்வரியை முகம், கழுத்து உட்பட பல்வேறு இடங்களில் கடித்துவிட்டு ஓடிவிட்டது. மாணவியை அங்கிருந்தவர்கள் மீட்டு பெரம்பலூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
தகவலறிந்த போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், மருத்துவமனைக்குச் சென்று மாணவியை சந்தித்து நலம் விசாரித்தார். மாணவிக்கு தரமான சிகிச்சை அளிக்குமாறு மருத்துவர்களுக்கு அறிவுறுத்தினார். முன்னதாக, ஏப்.12ம் தேதி நக்கசேலம் கிராமத்தைச் சேர்ந்த சிங்காரம் என்பவரின் 2 கன்றுக்குட்டிகளை தெரு நாய் கடித்ததில் ஒரு கன்றுக்குட்டி அந்த இடத்திலேயே உயிரிழந்தது. பலத்த காயமடைந்த மற்றொறு கன்றுக்குட்டிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மேலும், பெரம்பலூர் வடக்கு மாதவி சாலை ஜமாலியா நகரில் வெறி நாய் சாலையில் நின்று கொண்டிருந்த மக்களை விரட்டி, விரட்டி கடித்தது. இதில் ஜமாலியா நகரைச் சேர்ந்த தங்கராஜு (65), கர்ணன் (51), மணிமாறன் (38), அனுசுயா (21), கோபிநாத் (5) ஆகியோர் காயமடைந்து, பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவம்னையில் சிகிச்சை பெற்றனர். இதேபோல அதே பகுதியில் 2 மாடுகள், 4 ஆடுகளையும் தெரு நாய்கள் கடித்துக் குதறியுள்ளன.
பல்வேறு மாவட்டங்களில் தெரு நாய்களின் பெருக்கத்தை கட்டுப்படுத்த நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்து ரேபீஸ் தடுப்புசி செலுத்தப்படுகிறது. இதனால் நாய்களின் இனப்பெருக்கம் கட்டுப்படுத்தப்படுவதுடன், நாய்களுக்கு வெறி பிடிக்காமல் தடுக்கப்படுகிறது.
ஆனால், பெரம்பலூர் மாவட்டத்தில் நாய்களின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்தும் நடவடிக்கையோ, ரேபீஸ் தடுப்பூசி செலுத்துவதோ கிடையாது. இதனால் பெரம்பலூர் மாவட்டத்தில் வெறி நாய்களில் தொல்லை அதிகரித்து வருகிறது. இப்பிரச்சினையில் மாவட்ட நிர்வாகம் கவனம் செலுத்தி தெரு நாய்களை இனப்பெருக்கத்தைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளிலும், ரேபீஸ் தடுப்பூசி செலுத்தும் பணிகளிலும் ஈடுபட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.