பாமக பொருளாளர் திலகபாமா கட்சியைவிட்டு வெளியேற வேண்டும்: பொதுச்செயலாளர் கடும் விமர்சனம்


சென்னை: ராமதாஸை ஜனநாயக படுகொலை செய்தவர் எனக்கூறிய பாமக பொருளாளர் திலகபாமா கட்சியில் இருந்து வெளியேற வேண்டும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் வடிவேல் ராவணன் தெரிவித்துள்ளார்.

பாமகவில் அதிகாரம் செலுத்துவதில் கட்சியின் நிறுவனர் ராமதாஸ்ஸுக்கும் தலைவர் அன்புமணிக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. இந்நிலையில், அன்புமணிக்கு ஆதரவு தெரிவித்து, கட்சியின் பொருளாளர் திலகபாமா சமூக வலைதளப்பதிவில், “பாமகவில் கட்சியில் ஜனநாயகம் கொலை செய்யப்பட்டுள்ளது.

இதுவரை ராமதாஸ் எடுத்த அனைத்து முடிவுகளும் சரியானது. ஆனால், இந்த முடிவு தவறு" என்று பதிவு செய்தார். மேலும், சமூகத்தின் நலன் காக்கப்பட வேண்டும் என்றால் தற்போதைய சூழலில் அன்புமணியின் தலைமையில் மட்டுமே முடியும்” என கட்சியின் தொண்டர் பதிவிட்ட கருத்தையும் பகிர்ந்திருந்தார்.

இதற்கு எதிர்வினையாக ராமதாஸுக்கு ஆதரவு தெரிவித்து கட்சியின் பொதுச்செயலாளர் வடிவேல் ராவணன் வெளியிட்ட அறிக்கை: பாமக பொருளாளர் திலகபாமா சிறிதும் பொருளற்ற முறையில் சிறுபிள்ளைத் தனமாக ராமதாஸ் மீது குற்றம் சாட்டியிருக்கிறார். திலகபாமா கட்சிக்கு நேற்று வந்தவர். பாமகவின் கொள்கை கோட்பாடுகள் பற்றி அவருக்கு ஒன்றும் தெரியாது. கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக கட்சி மேற்கொண்ட போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், பேரணிகள், மாநாடுகள், பொதுக்கூட்டங்கள் எதிலும் கலந்து கொள்ளாதவர். பாமகவை அழிப்பதற்காக கட்சிக்குள் புகுந்த நோய்க்கிருமி.

ராமதாஸை ஜனநாயக படுகொலை செய்தவர் என்றுவஞ்சக எண்ணத்தோடு சொற்களை அள்ளி வீசிய திலகபாமாவை வன்மையாக கண்டிக்கிறேன். கொஞ்சமும் நன்றியுணர்ச்சி இன்றி ராமதாஸை வசைபாடி இருக்கும் திலகபாமா உடனடியாக கட்சியில் இருந்து வெளியேறி விடுவதுதான் நல்லது. ஆட்சியாளரின் தவறான போக்குகளையும், ஆட்சியின் குறைபாடுகளையும் ஏமரா மன்னனை இடித்துரைக்கும் சான்றோனாக விளங்கிவரும் ராமதாஸை, வசைபாடி மகிழ்வதை விடுத்து, தான் கூறியவற்றை திரும்பப் பெற வேண்டும். அப்படியே கட்சியிலிருந்தும் வெளியேறிவிட வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

x