திருச்சி: 3 காவல் ஆய்வாளர்கள் உட்பட 284 போலீஸார் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
திருச்சி மாநகரில் 4 அனைத்து மகளிர் காவல் நிலையங்கள், 14 குற்றம் மற்றும் சட்டம்- ஒழுங்கு காவல் நிலையங்கள், 6 போக்குவரத்து காவல் நிலையங்கள், 2 போக்குவரத்து புலனாய்வு காவல் நிலையங்கள் உள்ளன. தவிர, நுண்ணறிவுப் பிரிவு, சைபர் கிரைம், மாநகர குற்றப் பிரிவு என பல்வேறு காவல் அலுவலகங்கள் உள்ளன.
இந்நிலையில், திருச்சி மாநகரில் பல்வேறு காவல் நிலையங்களில் பணியாற்றி 3 ஆண்டுகள் நிறைவு செய்த போலீஸார் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி, திருச்சி சைபர் கிரைம் காவல் ஆய்வாளர் கே.சண்முகவேல் காந்தி மார்க்கெட் குற்றப்பிரிவுக்கும், கோட்டை குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் வி.நிர்மலா சைபர் கிரைம்(பொறுப்பு) காவல் நிலையத்துக்கும், அமர்வு நீதிமன்ற காவல் நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளர் ஆர்.ரத்னவல்லி கோட்டை குற்றப்பிரிவுக்கும் மாற்றப்பட்டுள்ளனர்.
மேலும், விமானநிலையம், அரியமங்கலம், கோட்டை, கன்டோன்மென்ட், எடமலைப்பட்டிபுதூர், அரசு மருத்துவமனை, காந்தி மார்க்கெட், பொன் மலை, கே.கே.நகர், பாலக்கரை, ஸ்ரீரங்கம், தில்லைநகர், உறையூர், அமர்வு நீதிமன்றம் ஆகிய காவல் நிலையங்கள் மற்றும் மாநகர குற்றப்பிரிவு, கட்டுப்பாட்டு அறை, போக்குவரத்துப் பிரிவு, அனைத்து மகளிர் காவல் நிலையங்களில் பணியாற்றி வந்த சிறப்பு உதவி ஆய்வாளர்கள், தலைமைக் காவலர்கள் என 281 போலீஸாரை பல்வேறு பகுதிகளுக்கு இடமாற்றம் செய்து திருச்சி மாநகர காவல் ஆணையர் என்.காமினி நேற்று உத்தரவிட்டார்.