தமிழகத்தில் வங்கக் கடல் கிழக்கு கடற்கரை பகுதியில் ஏப்.15-ம் தேதி முதல் மீன்பிடி தடைக்காலம் தொடங்குகிறது. இது ஜூன் 14-ம் தேதி வரை அமலில் இருக்கும்.
தமிழக கடல் மீன்பிடி ஒழுங்குபடுத்தும் சட்டம் 1983-ன் கீழ் தமிழகத்தில் கிழக்கு கடல் பகுதிகளில் மீன் இனப்பெருக்க காலத்தை முன்னிட்டும் மற்றும் மீன்வளத்தை பாதுகாக்கும் வகையிலும், ஆண்டுதோறும் ஏப்.15-ம் தேதி முதல் ஜூன் 14-ம் தேதி வரை 61 நாட்களுக்கு கடலில் மீன் பிடிப் பதற்கு ஆண்டுதோறும் தடை விதிக்கப்படுகிறது.
அதன்படி, நிகழாண்டுக்கான மீன்பிடி தடைக்காலம் ஏப்.15 தொடங்குகிறது. ஜூன் 14 வரை மொத்தம் 61 நாட்களுக்கு இந்த தடை அமலில் இருக்கும். எனவே, மீன்பிடி தடைக்காலம் அமலுக்கு முன்னர் கடலுக்கு சென்ற நாகை மாவட்டத்தைச் சேர்ந்த மீன்பிடி விசைப் படகுகள் ஏப்.14-ம் தேதி இரவு 12 மணிக்குள் தங்களுடைய படகு பதிவு செய்யப்பட்ட தங்கு தளத்துக்கு கரை திரும்ப வேண்டும். இந்த அறிவிப்பை மீறி தடைக் காலத்தில் மீன் பிடிப் பில் ஈடுபடும் படகுகள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.