சென்னை: மதுரவாயல் மற்றும் ஆலப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில், நேற்று நள்ளிரவு புதைவட கேபிளில் அடுத்தடுத்து ஏற்பட்ட பழுதுகளால் மின்விநியோகம் பாதிக்கப்பட்டது. இதனால், பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.
வெள்ளிக்கிழமை இரவு 33 கிலோ வோல்ட் கோயம்பேடு - மதுரவாயல் பீடர் மின் புதைவட கேபிள் எர்த் பழுது காரணமாக மின்விநியோகம் தடைப்பட்டது. இதையடுத்து, 33 கிலோ வோல்ட் ஜே.ஜே. நகர் - மதுரவாயல் பீடர் மூலமாக ஒரு சில பகுதிகளுக்கு மின்விநியோகம் மாற்றி வழங்கப்பட்டது. எஞ்சிய பகுதிகளுக்கு 33 கிலோ வோல்ட் காரம்பாக்கம் துணை நிலையம் மற்றும் கோயம்பேடு மார்க்கெட் துணை நிலையத்தின் மூலமாக மின் விநியோகம் மாற்றி வழங்கப்பட்டது.
இந்நிலையில், ஜே.ஜே. நகர் பீடரில் இன்று (சனிக்கிழமை) அதிகாலை எதிர்பாரத விதமாக ஏற்பட்ட பழுதினால் மின்சாரம் தடைபட்டது. மேலும், 33 கிலோ வோல்ட் சின்மயாநகர் - மதுரவாயல் பீடரின் பழுது சரி செய்யப்பட்டு, சோதனை சார்ஜிங்கின் போது, மீண்டும் பழுது ஏற்பட்டு மின்சார விநியோகம் தடைப்பட்டது.
இதற்கிடையில், 33 கிலோ வோல்ட் சின்மயாநகர் - மதுரவாயல் பீடரில் புதைவட பிரிவு பழுது குழுவின் மூலம், புதைவடம் பழுதான இடம் கண்டறியப்பட்டு, பழுது சரி செய்யும் பணி போர்கால அடிப்படையில் நடைபெற்று, ஆலப்பாக்கம், அஷ்டலட்சுமி, கடற்படை குடியிருப்பு, பூஸ்டர் மற்றும் வி.ஆர்.டபிள்யூ ஆகிய பீடர்கள் மூலம், இன்று காலை 8.50 மணிமுதல் 10.30 மணிக்குள்ளாக, அனைத்து பகுதிகளுக்கும் மின் விநியோகம் மீண்டும் வழங்கப்பட்டது.
மேலும், மின்விநியோகம் வழங்கும் நிலையை, சென்னை மின்வாரிய தலைமை அலுவலகத்தில் 24 மணி நேரமும் கண்காணித்து வரும் சென்னை மின்விநியோக கட்டுப்பாட்டு அறையை மின்வாரிய தலைவர் டாக்டர் ஜெ. ராதாகிருஷ்ணன் நேரில் பார்வையிட்டு, சீரான மின் விநியோகம் வழங்குவதை கண்காணித்து உறுதி செய்தார். இந்த மின்தடை காரணமாக, இப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர்.