‘எம்ஜிஆர் அண்ணா திராவிட முன்னேற்ற கழகம்’ - புதிய கட்சி தொடங்குகிறார் ஓபிஎஸ்?


சென்னை: எம்ஜிஆர் அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் என்ற பெயரில் புதிய கட்சியை தேர்தல் ஆணையத்தில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர் பதிவு செய்துள்ளதாக வெளியாகியுள்ள தகவல்கள் தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

2021 சட்டமன்றத் தேர்தலுக்கு பின்னர் ஓபிஎஸ்சை அதிமுகவிலிருந்து நீக்கினார். பின்னர் எப்படியாவது அதிமுகவில் இணைந்து விட வேண்டும் என பிரயத்தனம் செய்து வருகிறார் ஓபிஎஸ். ஓபிஎஸ்ஸை அதிமுகவில் இணைத்துக் கொள்ள பாஜக கோரிக்கை வைத்தும் அதை எடப்பாடி பழனிசாமி மறுத்து விட்டார். இதனால் கடந்த மக்களவை தேர்தலில் பாஜக கூட்டணியில் ராமநாதபுரம் தொகுதியில் இரட்டை இலை சின்னத்தை எதிர்த்து பலாப்பழம் சின்னத்தில் போட்டியிட்டு ஓபிஎஸ் தோல்வி அடைந்தார்.

தற்போது அதிமுக - பாஜக கூட்டணி மீண்டும் அமைந்துள்ளது. எனவே டிடிவி தினகரன், ஓபிஎஸ் நிலை என்னவாகும் என்பது கேள்விக்குறியாகியுள்ளது. இந்த நிலையில் நேற்று அமித்ஷாவிடம் செய்தியாளர்கள் சந்திப்பில் ஓபிஎஸ்ஸை அதிமுகவில் இணைக்க வேண்டும் என வலியுறுத்துவீர்களா என கேட்டதற்கு, அதிமுகவின் உள்கட்சி விவகாரத்தில் தலையிட மாட்டோம் என கூறிவிட்டார்.

இது ஓபிஎஸ்ஸுக்கு பெரும் பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் அதிமுகவில் தன்னை இணைக்காவிட்டால் புதிய கட்சியை ஓபிஎஸ் தொடங்க திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. இதற்காக காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஜோதிராமன் என்ற ஆதரவாளர் மூலம் ‘எம்ஜிஆர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்’ என தேர்தல் ஆணையத்தில் பெயர் பதிவு செய்துவிட்டதாகவும் தகவல்கள் சொல்லப்படுகின்றன. இந்த புதிய கட்சிக்காக கடந்த டிசம்பரில் அளித்த விண்ணப்பித்திற்கு 2025 ஜனவரி மாதம் தேர்தல் ஆணையமும் ஒப்புதல் அளித்ததாக தெரிகிறது.

எனவே வரும் 2026 தேர்தலில் ஒருவேளை அதிமுக-பாஜக கூட்டணியில் தன்னை இணைக்கவில்லையெனில், தனித்தோ அல்லது தவெக கூட்டணியிலோ இணைந்தோ போட்டியிடவும் ஓ.பன்னீர்செல்வம் தயாராகி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

x