கோவை: கோடை கால விடுமுறை தொடங்கியுள்ள நிலையில் கோவையில் இருந்து புதிய விமான சேவைகள் அறிவிக்கப்படாதது பயணிகள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை சர்வதேச விமான நிலையத்தில் சென்னை, பெங்களூரு, டெல்லி, மும்பை உள்ளிட்ட உள்நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும், ஷார்ஜா, சிங்கப்பூர், அபுதாபி ஆகிய வெளிநாடுகளுக்கும் விமான சேவை வழங்கப்படுகிறது. கோடை விடுமுறை தொடங்கியுள்ள நிலையில் கோவையில் இருந்து புதிய விமான சேவைகள் தொடங்கப்படாதது பயணிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து தென்னிந்திய மில்கள் சங்கத்தின்(சைமா) முன்னாள் தலைவர் ரவிசாம் கூறியதாவது: கோவை விமான நிலையத்தில் தினமும் 35 விமானங்கள் இயக்கப்படுகின்றன. பயணிகள் எண்ணிக்கை 10 ஆயிரத்தை கடந்துள்ளது. தற்போது கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில் பலர் வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்ல ஆயத்தமாகி வருகின்றனர். இதனால் எதிர்வரும் நாட்களில் விமான பயணிகள் எண்ணிக்கை மேலும் உயரும். நிலையான வளர்ச்சி காணப்படும் நிலையில் அதற்கேற்ப கோவையில் விமான சேவைகள் விரிவுபடுத்தப்படவில்லை.
கோவை - இலங்கை இடையே வாரத்தில் நான்கு நாட்கள் சேவை வழங்கப்பட்டு வந்தது. கரோனா பரவல் மற்றும் அதை தொடர்ந்து அந்நாட்டில் நிலவிய பொருளாதார மந்த நிலை ஆகிய காரணங்களால் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்ட அந்த சேவை ஐந்து ஆண்டுகள் கடந்தும் மீ்ண்டும் தொடங்கப்படவில்லை. இலங்கைக்கு விமான சேவை வழங்குவதால் இங்கிலாந்து உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளுக்கு செல்லும் பயணிகளுக்கு மிகுந்த பயன் தரும்.
அதேபோல் துபாய், பாங்காக், கோலாலம்பூர், தோஹா போன்ற வெளிநாடுகளுக்கு நேரடி விமான சேவை வழங்க வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. சிங்கப்பூருக்கு தற்போது இரண்டு சேவைகள் வழங்கப்படுவது வரவேற்கத்தக்கது என்ற போதும், நேரத்தை மாற்றியமைக்க வேண்டும் என வலியுறுத்தி வருகிறோம். அதிகாலை நேரங்களில் இறக்கிவிடப்படுவதால் மதியம் வரை ஓட்டல்களில் அறை கிடைக்காமல் பயணிகள் அவதிப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. கோவை விமான நிலையத்தில் விரிவாக்க திட்ட பணிகளை விரைந்து தொடங்கவும், விமான சேவைகளை அதிகரிக்கவும் மத்திய அரசு உதவ வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.