ராமநாதபுரம்: ராமநாதபுரம் வழிவிடு முருகன் கோயில் பங்குனி உத்திரத் திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பால்குடம், காவடிகள், அலகு குத்தி நேர்த்திக்கடன் செலுத்தினர்.
ராமநாதபுரம் நகர் பேருந்துநிலையம் அருகே மிகவும் பிரசித்தி பெற்ற வழிவிடு முருகன் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலின் 85-வது பங்குனி உத்திர திருவிழா கடந்த 2-ம் தேதி காப்புக்கட்டு, கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்று முதல் சுவாமிக்கு தினமும் அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. காப்புக்கட்டிய பக்தர்கள் தினமும் ஆலயத்திற்கு திரண்டு சாமி தரிசனம் செய்து வந்தனர். தினமும் மாலையில் ஆன்மிக சொற்பொழிவு, ஆன்மிக இன்னிசை நிகழ்ச்சி, பாரம்பரிய கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.
முக்கிய திருவிழாவான பங்குனி உத்திரத்தை முன்னிட்டு இன்று அதிகாலை முதல் பக்தர்கள் 4 கி.மீ தொலைவிலுள்ள நொச்சிவயல் ஊரணிக்கரையில் அமைந்துள்ள பிரம்மபுரீஸ்வரர் ஆலயத்தில் இருந்து பால்குடம், பல்வேறு வகையான காவடிகள் எடுத்தும், அலகு குத்தியும் நகரின் முக்கிய சாலைகள் வழியாக ஊர்வலமாக வந்து ஆலயத்தில் நேர்த்திக்கடன் செலுத்தி வருகின்றனர்.
கோயில் சார்பில் காலை 9 மணிக்கு கோயிலில் இருந்து புறப்பட்டு நொச்சிவயல் ஊரணி பிரம்மபுரீஸ்வரர் ஆலயம் சென்று பால்குடம், பால்காவடி கட்டிப் புறப்பட்டு கோயிலை வந்தடைந்தனர். பின்னர் பகல் 12 மணிக்கு சுவாமிக்கு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது. இதில் ராமநாதபுரம் நகர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
இதனால் ராமநாதபுரம் நகர் முழுவதும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. ஆங்காங்கே நீர், மோர் பந்தல்கள் அமைத்தும், குளிர்பானங்கள், அன்னதானமும் பல்வேறு தரப்பினர் பக்தர்களுக்கு வழங்கினர். இரவு வழி விடு முருகன் ஆலயத்தின் முன்பாக பூக்குழி இறங்கும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. ராமநாதபுரம் மாவட்ட கண்காணிப்பாளர் ஜி.சந்தீஷ் தலைமையில் 500-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை ஆலய பரம்பரை தர்மகர்த்தா ஜெயகுமார் செய்திருந்தார்.