விருதுநகர்: சத்துணவு மையங்களில் காலியாக உள்ள 273 சமையல் உதவியாளர் பணியிடங்கள் நேரடி நியமனம் செய்யப்பட உள்ளன.
இது குறித்து மாவட்ட ஆட்சியர் வீ.ப.ஜெயசீலன் செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது: விருதுநகர் மாவட்ட பள்ளிகளில் செயல்படும் சத்துணவு மையங்களில் காலியாக உள்ள 273 சமையல் உதவியாளர் பணியிடங்கள் நேரடியாக நியமனம் செய்யப்பட உள்ளன. ஊராட்சி ஒன்றியம் வாரியாக காலிப்பணியிட விவரம் மற்றும் விண்ணப்பங்களை www.virudhunagar.nic.in என்ற வலைதள முகவரியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
விண்ணப்பதாரர் 10-ம் வகுப்பு தோல்வி அல்லது தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பொதுப்பிரிவினர் மற்றும் தாழ்த்தப் பட்டோருக்கு 21 வயது பூர்த்தி அடைந்தும் 40 வயதுக்கு மிகாதவராகவும் இருக்க வேண்டும். பழங்குடியினருக்கு 18 வயது பூர்த்தி அடைந்தும், 40 வயதுக்கு மிகாதவராகவும் இருக்க வேண்டும். விதவைகள் மற்றும் கணவனால் கைவிடப்பட்டோர் 20 வயது பூர்த்தி அடைந்தும் 40 வயதுக்கு மிகாதவராகவும் இருக்க வேண்டும். மாற்றுத் திறனாளிகளுக்கு 4 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்படும். விதவைகள், கணவரால் கைவிடப்பட்டோர், ஆதரவற்ற பெண்களுக்கு 25 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்படும்.
விண்ணப்பங்களைப் பூர்த்தி செய்து அந்தந்த ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் ஏப்.29-ம் தேதி மாலை 5.45 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பத்துடன் பள்ளி மாற்றுச்சான்றிதழ், 10-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், குடும்ப அட்டை, இருப்பிடச்சான்று, ஆதார் அட்டை, சாதிச்சான்று போன்றவற்றின் நகல் இணைக்கப்பட வேண்டும். விதவை, கணவரால் கைவிடப்பட்டோர், மாற்றுத் திறனாளிகள் அதற்கான சான்றிதழ்களின் நகல்களையும் இணைக்க வேண்டும்.
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் காலியாக உள்ள 187 சமையல் உதவியாளர் பணியிடங்கள் நேரடி யாக நியமனம் செய்யப்பட வுள்ளன. விண்ணப்பப் படிவத்தை https:/ramanathapuram.nic.in என்ற இணையதள முகவரியில் பதிவி றக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்த விண்ணப்பத்தை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அல்லது நகராட்சி அலுவல கத்தில் ஏப்.26ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.