தூத்துக்குடி: புனித வெள்ளியன்று மதுக் கடைகளை மூட வலியுறுத்தி தூத்துக்குடியில் கிறிஸ்தவர்கள் நேற்று உண்ணாவிரத போராட்டம் நடத்தினர். ஆதரவாக பல்வேறு அமைப்பினர் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
ஏசுகிறிஸ்து உயிர் துறந்த நாளான புனித வெள்ளி தினத்தை தமிழ்நாட்டில் மது விற்பனை இல்லாத நாட்கள் பட்டியலில் சேர்த்து, அன்றைய தினம் மதுக்கடைகள் அனைத்தையும் மூட வேண்டும் என கிறிஸ்தவர்கள் கடந்த சில ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். இது தொடர்பாக தமிழக முதல்வர், அமைச்சர்கள், மாவட்ட ஆட்சியர்கள், கட்சி தலைவர்களிடம் கோரிக்கை மனுக்களை அளித்து வருகின்றனர்.
இந்த ஆண்டு புனித வெள்ளி தினம் வரும் 18ம் தேதி கடைபிடிக்கப்படவுள்ள நிலையில், அன்றைய தினம் மதுபானக் கடைகளை மூட வலியுறுத்தி பல்வேறு கிறிஸ்தவ அமைப்புகள் சார்பில் தூத்துக்குடியில் கவன ஈர்ப்பு உண்ணாவிரத போராட்டம் நேற்று நடைபெற்றது. தூத்துக்குடி சின்னக் கோயில் வளாகத்தில் நடைபெற்ற உண்ணாவிரத போராட்டத்துக்கு தூத்துக்குடி கத்தோலிக்க மறை மாவட்ட ஆயர் ஸ்டீபன் தலைமை வகித்தார்.
முன்னாள் ஆயர் இவான் அம்புரோஸ், மறைமாவட்ட முதன்மை குரு ரவிபாலன், செயலாளர் அன்றணி ஜெகதீசன், பொருளாளர் பிரதீப், மதுவிலக்கு சபை இயக்குநர் அருட்தந்தை ஜெயந்தன், சிஇஎப்ஐ பேராயத்தின் தேசிய பொதுச் செயலாளர் ஆயர் ஆ.ஸ்டீபன், அகில இந்திய ஜனநாயக சிறுபான்மை மக்கள் உரிமை இயக்க தலைவர் ஜெயராஜ், பெந்த கோஸ்தே சபைகளின் மாமன்ற தலைவர் ஆயர் ஜஸ்டஸ், பெந்தகோஸ்தே சபைகளின் கூட்டமைப்பு பொதுச் செயலாளர் சாம் செல்வராஜ் உள்ளிட்ட பல்வேறு கிறிஸ்தவ சபைகள், அமைப்புகளை சேர்ந்தவர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
அமலோற்பவ மாதா மதுவிலக்கு சபைகளின் தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். அதிமுக மாநில வர்த்தக அணி செயலாளர் சி.த.செல்லப்பாண்டியன், தவெக மாவட்ட அமைப்பாளர் அஜிதா ஆக்னல், தெற்கு மாவட்ட பொறுப்பாளர் பிரைட்டர், விடுதலை சிறுத்தைகள் கட்சி தெற்கு மாவட்ட செயலாளர் டிலைட்டா, நாம் தமிழர் கட்சி தொகுதி பொறுப்பாளர் பாக்கியராஜ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்கள் ஆதரவு தெரிவித்து உண்ணாவிரதத்தில் பங்கேற்றனர்.
புனித வெள்ளியன்று மதுக்கடைகளை மூட அரசு கொள்கை முடிவெடுத்து தீர்மானம் கொண்டு வந்து, மது விற்பனை இல்லாத சிறப்பு நாட்கள் பட்டியலில் சேர்க்க வேண்டும். அரசின் வாக்குறுதிக்கு ஏற்ப மதுக்கடைகளை படிப்படியாக குறைக்க வேண்டும். பள்ளிகள், கல்லூரிகள், அனைத்து சமய வழிபாட்டு தலங்கள், மக்கள் நடமாட்டம் அதிகமான பகுதிகளின் அருகாமையில் உள்ள மதுக்கடைகளை அகற்ற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் உண்ணாவிரதத்தில் வலியுறுத்தப்பட்டன.