மதுரை: அரசு போக்குவரத்துக் கழகத்தில் மாற்றுப்பணி என்ற பெயரில் ஆளும் கட்சி தொழிற்சங்கத்தைச் சேர்ந்த ஓட்டுநர்கள், நடத்துனர்கள் வேலைக்குச் செல்லாமல் சம்பளம், படி பெறுவது தொடர்பாக, அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அரசு போக்குவரத்துக் கழக மதுரை தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் கனகசுந்தர், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் கடந்த 2019ல் தாக்கல் செய்த மனு: மதுரை அரசு போக்குவரத்துக் கழகத்தில் 16 கிளைகளிலும் ஆளும் கட்சி தொழிற்சங்கத்தைச் சேர்ந்த 208 பேர் மாற்றுப் பணி என்ற பெயரில் எந்த வேலையும் பார்க்காமல் ஊதியம் மற்றும் படிகளை பெற்று வருகின்றனர். இவர்களுக்கு ஊதியம் மற்றும் படி என மாதம் ரூ.60 லட்சத்துக்கு மேல் செலவிடப் படுகிறது.
அரசு போக்குவரத்துக் கழகங்கள் ஏற்கெனவே நஷ்டத்தில் இயங்கி வருகிறது. இந்நிலையில், வேலைக்குச் செல்லாமல் சம்பளம் வழங்குவதால் மேலும் நஷ்டம் ஏற்படுகிறது. அரசு போக்குவரத்துக் கழகங்களில் நடத்துனர், ஓட்டுநர்களை மாற்றுப் பணியில் ஈடுபடுத்தக்கூடாது என, தமிழக அரசு 2018ல் அரசாணை பிறப்பித்துள்ளது. இருப்பினும், ஆளும் கட்சி தொழிற்சங்கத்தைச் சேர்ந்த நடத்துனர், ஓட்டுநர்கள் மாற்றுப் பணி என்ற பெயரில் வேலைக்குச் செல்லாமல் சம்பளம் மற்றும் இதர படிகளை பெறுவது சட்டவிரோதம்.
எனவே, மாற்றுப்பணி என்ற பெயரில் வேலைக்குச் செல்லாமல் இருக்கும் ஆளும்கட்சி தொழிற்சங்கங்களைச் சேர்ந்த ஓட்டுநர், நடத்துனர்களுக்கு சம்பளம் மற்றும் படிகளை நிறுத்தவும், அவர்களை பணியில் ஈடுபடுத்தவும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம், நீதிபதி பி.பி.பாலாஜி அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில், தற்போதும் ஆளும் கட்சி தொழிற்சங்கத்தைச் சேர்ந்த ஓட்டுநர், நடத்துனர்கள் வேலைக்குச் செல்லாமல் சம்பளம், படிகளை பெற்று வருகின்றனர் எனத் தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக போக்குவரத்துத் துறை கூடுதல் தலைமைச் செயலர் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை ஜூன் 9ம் தேதிக்கு தலைமை நீதிபதி அமர்வு தள்ளி வைத்தது.