மதுரை: சித்திரைத் திருவிழாவில் நடப்பாண்டு 30 லட்சம் பக்தர்கள் திரள வாய்ப்புள்ளதாகக் கணித்து அதற்கேற்ப சுகாதாரம், குடிநீர், மருத்துவம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேற்கொள்ள மாநகராட்சி நிர்வாகம் தற்போதே தயாராகி வருகிறது.
மதுரை மீனாட்சியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா ஏப்.29-ல் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 12 நாட்கள் நடைபெறும் இந்தத் திருவிழா வில் பட்டாபிஷேகம், திருக்கல்யாணம், தேரோட்ட விழாக்களில் பக்தர்கள் அதிகளவில் கூடுவர். திருவிழாவின் மகுடமாக மே 12-ல் கள்ளழகர் ஆழ்வார்புரம் வைகை ஆற்றில் இறங்குகிறார். அன்றைய தினம் ஆற்றில் லட்சக்கணக்கான பக்தர்கள் திரள்வார்கள். கடந்த ஆண்டு திருவிழாவின் 12 நாட்களில் மொத்தம் 25 லட்சம் பக்தர்கள் திரண்டதாகவும், நடப்பாண்டு 30 லட்சம் பக்தர்கள் திரள்வார்கள் என்றும் மாநகராட்சி கணித்துள்ளது.
பக்தர்களுக்குத் தேவையான சுகாதாரம், குடிநீர், மருத்துவம், சாலை கட்டமைப்பு மற்றும் பிற அடிப்படை வசதிகளை மேற்கொள்ள மாநகராட்சி தயாராகி வருகிறது. மாநகராட்சியில் 3,500 தூய்மைப்பணியாளர்கள் மட்டுமே இருப்பதால் அன்றாடம் 100 வார்டுகளின் தூய்மைப் பணியையே மிகுந்த சிரமப்பட்டே மாநகராட்சி நிர்வாகம் மேற்கொள்கிறது.
ஆனால், சித்திரைத் திருவிழா நடக்கும் வார்டுகளில் கூடுதல் தூய்மைப் பணியாளர்கள் சுழற்சி அடிப்படையில் பணிபுரிய வேண்டி உள்ளது. அதனால், ஒவ்வொரு ஆண்டும் சித்திரைத் திருவிழாவுக்கு பிற மாநகராட்சிகளின் தூய்மைப் பணியாளர்கள் பயன்படுத்தப்பட்டனர். அதுபோல், நடப்பாண்டு கூடுதல் தூய்மைப் பணியாளர்களை வரவழைக்க மாநகராட்சி ஆலோசித்து வருகிறது.
கடந்த காலத்தில் திருவிழாவின்போது பிளக்ஸ் பேனர்களால் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் விபத்துகள் நடந்துள்ளன. மதுரையிலும் மாநகராட்சி அனுமதி இன்றி திரும்பிய பக்கமெல்லாம் பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்படுகின்றன. ஆனால், அதிர்ஷ்டவசமாக இதுவரை பிளக்ஸ் பேனர்களால் உயிரிழப்புகள் ஏதும் ஏற்படவில்லை. இந்த ஆண்டு பிளக்ஸ் பேனர்களை மாநகராட்சி அனுமதி பெற்றே வைக்க நடவடிக்கை எடுக்க உள்ளது.
இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியது: தேரோட்ட நாளில் மட்டுமே மாசி வீதிகளில் பக்தர்கள் விட்டுச்சென்ற பொருட்கள், அறுந்து கிடக்கும் காலணிகளை அப்புறப்படுத்துவோம். திருவிழா நடைபெறும் மண்டலம்-3, மண்டலம்-2 ஆகிய வார்டுகளில் மட்டுமே பக்தர்கள் கொட்டும் உணவுக் கழிவுகள், பிளாஸ்டிக் கழிவுகள், பேப்பர் கப்புகள், பூக் கழிவுகள் மற்றும் பிற குப்பைகள் அன்றாடம் பல நூறு டன் சாலைகளில் சேரும். அவற்றை அகற்றுவதற்கு வாகனங்கள், தடவாளப்பொருட்களை கூடுதலாக வாங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
திருவிழா நாட்களில் நகரில் சேரும் குப்பைகளை உடனுக்குடன் அகற்றி, உரக்கிடங்குக்குக் கொண்டு செல்ல இலக்கு வைத்து செயல்பட மாநகராட்சி ஆணையர் சித்ரா நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். கோயிலின் உள்ளேயும், வெளியேயு ம் பக்தர்களுக்கு முதலுதவி வழங்குவதற்கு கடந்த ஆண்டு 60 முதல் 70 மருத்துவ முகாம்களை நடத்தினோம். நடப்பாண்டு அதே இடங்கள் உட்பட கூடுதல் இடங்களில் மருத்துவ முகாம்கள் அமைக்க ஆணையர் ஆலோசனை வழங்கியுள்ளார்.
திருவிழா நாட்களில் மாநகராட்சி குடிநீர் சுகாதாரமாக இருக்கிறதா? என்பதை ஆய்வு செய்வதற்கு தினமும் மாதிரி எடுத்து திருநெல்வேலியில் உள்ள மண்டல குடிநீர் ஆய்வகத்துக்கு அனுப்புவோம். அதுபோல், பொறியியல் துறை அதிகாரிகள், சித்திரைத் திருவிழா நடக்கும் இடங்களில் புதிய சாலைகள் அமைப்பது, மறுசீரமைப்பது, மின் வயர்களை ஒழுங்கு படுத்தி தெரு விளக்குளைப் பொருத்துவது, பக்தர்களை வெயிலில் இருந்து பாதுகாக்க ஆங்காங்கே நிழல் குடை அமைப்பது போன்ற பணிகளும் விரைவில் தொடங்கப்பட உள்ளன.
கடந்த ஆண்டு மாநகராட்சி, அறநிலையத் துறை, பொதுப்பணித் துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் சித்திரைத் திருவிழாவுக்காக ரூ.95 லட்சம் செலவிடப்பட்டது. நடப்பாண்டு பக்தர்கள் வருகை அதிகரிப்பு, விலைவாசி உயர்வு போன்றவற்றால் ரூ.1 கோடிக்கு மேல் செலவு ஏற்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.