சென்னை: மறைந்த முன்னாள் திமுக அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் மீதான சொத்து குவிப்பு வழக்கில் இருந்து அவரது குடும்பத்தினரை விடுவித்தது தவறு என்று கூறியுள்ள சென்னை உயர் நீதிமன்றம், இதுதொடர்பாக சேலம் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்துள்ளது. மீண்டும் குற்றச்சாட்டு பதிவு செய்து, சாட்சி விசாரணையை தொடங்கவும் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 1996-2001 திமுக ஆட்சியில் விவசாயத் துறை அமைச்சராக இருந்த வீரபாண்டி ஆறுமுகம், வருமானத்துக்கு அதிகமாக ரூ.1.81 கோடிக்கு சொத்து சேர்த்ததாக புகார் எழுந்தது. பின்னர், கடந்த 2004-ல் அதிமுக ஆட்சியின்போது, முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம், அவரது மனைவிகள் ரங்கநாயகி, லீலா, மகன்கள் நெடுஞ்செழியன், ராஜேந்திரன், மகள் நிர்மலா, மருமகள்கள் பிருந்தா, சாந்தி ஆகியோருக்கு எதிராக லஞ்ச ஒழிப்பு துறை போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் இருந்து விடுவிக்க கோரி வீரபாண்டி ஆறுமுகம் உள்ளிட்ட குடும்பத்தினர் தாக்கல் செய்த மனுக்களை விசாரித்த சேலம் நீதிமன்றம், வழக்கில் இருந்து அனைவரையும் விடுவித்து கடந்த 2006-ல் உத்தரவிட்டது. இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த நிலையில், கடந்த 2012-ல் வீரபாண்டி ஆறுமுகம் காலமானார். இதையடுத்து, இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட வீரபாண்டி ஆறுமுகத்தின் குடும்பத்தினரையும் விடுவித்தது சரி என்று கூறி மேல்முறையீட்டு வழக்கை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இதை எதிர்த்து லஞ்ச ஒழிப்பு துறை சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், ‘வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட பிரதான நபர் இறந்துவிட்டாலும், மற்றவர்கள் மீதான வழக்கை விசாரிக்க எந்த தடையும் இல்லை’ என்று கூறி, வழக்கை மீண்டும் சென்னை உயர் நீதிமன்றத்துக்கு மாற்றி கடந்த 2017-ல் உத்தரவிட்டது. இதற்கிடையே, வீரபாண்டி ஆறுமுகத்தின் மூத்த மகன் நெடுஞ்செழியனும் இறந்துவிட்டதால், அவர் மீதான வழக்கும் கைவிடப்பட்டது.
இதையடுத்து, வழக்கில் இருந்து மற்றவர்கள் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த நீதிபதி பி.வேல்முருகன் தனது உத்தரவில் கூறியதாவது: லஞ்ச ஒழிப்பு துறை வெறும் ஊகத்தின் அடிப்படையில் இந்த வழக்கை தொடரவில்லை. வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவிப்பில் ஈடுபட்டதாக வங்கி பரிவர்த்தனைகள், சொத்து தொடர்பான ஆவணங்கள், ஆதாரங்களுடன்தான் இந்த வழக்கை பதிவு செய்துள்ளது. இந்த சொத்துக்கள் தங்களது சுயசம்பாத்தியம் என்ற மனுதாரர்கள் தரப்பு வாதங்களை ஏற்க முடியாது.
முழு விசாரணைக்கு பிறகே அது தெரியவரும். எனவே, மறைந்த முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் குடும்பத்தினரை இந்த வழக்கில் இருந்து விடுவித்தது தவறு என்பதால் அதுதொடர்பான சேலம் மாவட்ட நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்கிறேன். குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக முறையாக குற்றச்சாட்டுகளை பதிவு செய்து, சாட்சி விசாரணையை சேலம் மாவட்ட நீதிமன்றம் தொடங்க வேண்டும். இவ்வாறு அவர் உத்தரவிட்டுள்ளார்.