‘ஆளும்கட்சி அதிமுக’ எனக் குறிப்பிட்ட முதல்வர் ஸ்டாலின்; சட்டசபையில் சலசலப்பு!


சென்னை: சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் பேசும்போது ‘ஆளும்கட்சி அதிமுக’ என குறிப்பிட்டது சலசலப்பை உருவாக்கியது. இதுகுறித்த வீடியோவை அதிமுக ஐடி விங்க் பகிர்ந்துள்ளது.

தமிழக சட்டப்பேரவையில் இன்று முதல்வர் ஸ்டாலின் நீட் குறித்த அனைத்துக்கட்சி கூட்டம் பற்றி பேசியபோது, ‘ஆளும்கட்சி அதிமுக’ என குறிப்பிட்டார். இது சலசலப்பை கிளப்பிய நிலையில், சபாநாயகர் ‘எதிர்க்கட்சி அதிமுக’ என குறிப்பிட்டார். இந்த வீடியோவை அதிமுக ஐடிவிங்க் பகிர்ந்துள்ளது.

கடந்த 2021-ம் ஆண்டு திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு செப்டம்பர் மாதம் 13ம் தேதி சட்டப்பேரவையில் நீட் விலக்கு சட்ட மசோதா ஒருமனதாக நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பிவைக்கப்பட்டது. அதை அவர் நிராகரித்ததை தொடர்ந்து மீண்டும் 2022-ம் ஆண்டு பிப்ரவரி 8-ம் தேதி சட்டசபையில் அதே சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டு குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு ஆளுநர் மூலம் அனுப்பிவைக்கப்பட்டது. இருப்பினும், நீட் விலக்கு சட்டத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்க மறுத்தது.

இதற்கிடையே, கடந்த 4-ம் தேதி சட்டப்பேரவையில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், வரும் ஏப்.9ம் தேதி (இன்று) நீட் விலக்கு தொடர்பாக அனைத்து சட்டமன்ற கட்சிகளின் கூட்டம் நடைபெறும் என அறிவித்திருந்தார். அதன்படி இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இந்தக் கூட்டம் நடைபெறுகிறது.

இந்தக் கூட்டத்தில், அதிமுக பங்கேற்காது என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று அறிவித்தார். அதேபோல இக்கூட்டத்தில் பாஜகவும் பங்கேற்காது என அறிவித்துள்ளது.

x