திருவாரூர்: திருத்துறைப்பூண்டி அருகே அரசு பள்ளி கட்டிடத்தின் மேற்கூரை சிமென்ட் காரை பெயர்ந்து விழுந்ததில் 4 மாணவர்கள் படுகாயமடைந்தனர்.
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள சேகல் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி உள்ளது. இங்கு, சேகல், சுந்தரபுரி, அழகிய நத்தம், தீபம்மாள்பட்டினம், கடையடி ஆகிய கிராமங்களைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர்.
இப்பள்ளியில் 2022- 23-ம் நிதியாண்டில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி நிதி குழந்தை நேய பள்ளி உட்கட்டமைப்பு மேம்பட்டு திட்டத்தின் கீழ் 2 வகுப்பறைகளுடன் கூடிய கட்டிடம் புதிதாக கட்டப்பட்டு பயன்பாட்டில் உள்ளது.
இந்த கட்டிடத்தில் 4 மற்றும் 5-ம் வகுப்பு மாணவர்கள் அமர்ந்து படிக்கும் வகுப்பறையின் மேற்கூரையில் இருந்து சிமென்ட் காரைகள் நேற்று மதியம் பெயர்ந்து விழுந்தன.
இதில், 4-ம் வகுப்பு மாணவர் கவியரசன், 5-ம் வகுப்பு மாணவர்கள் தேசிகன், புகழ்ராஜ், கனிஷ்கர் ஆகியோர் படுகாயமடைந்தனர். இதையடுத்து, பள்ளி ஆசிரியர்கள் மாணவர்களை மீட்டு, திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் சிகிச்கைக்காக அனுமதித்தனர். இதில், 5-ம் வகுப்பு மாணவர் தேசிகன் மேல் சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டார். இதுகுறித்து திருத்துறைப்பூண்டி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.