மதுரை: விமான நிலையத்தில் பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்கும் நிகழ்ச்சியில் தங்களை புறக்கணித்துவிட்டதாக, பாஜக மாவட்டப் பார்வையாளர்கள், முன்னாள் மாவட்ட தலைவர்கள் அதிருப்தியில் உள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம், பாம்பனில் புதிய ரயில் பாலத்தை திறந்து வைப்பதற்காக, இலங்கை சென்றிருந்த பிரதமர் மோடி அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் நேற்று முன்தினம் மண்டபம் வந்தார். அங்கு, பிரதமரை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, மத்திய அமைச்சர் எல்.முருகன், தமிழக அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் பாஜக சார்பில் மாநிலத் தலைவர் அண்ணாமலை, மூத்த தலைவர்கள் ஹெச்.ராஜா, பொன். ராதா கிருஷ்ணன், தமிழிசை சவுந்தர ராஜன், பாஜக எம்எல்ஏக்கள் நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன் மற்றும் பாஜக மேலிடப் பொறுப் பாளர்கள் உட்பட 11 பேர் வரவேற்றனர். பிரதமரை வரவேற்பதற்கு இவர்கள் முறைப்படி தேர்வு செய்யப்பட்டிருந்தனர்.
பாம்பன் புதிய ரயில் பாலம் திறப்பு விழா முடிந்ததும், பிரதமர் மோடி மண்டபம் முகாமிலிருந்து ஹெலிகாப்டரில் மதுரை விமான நிலையம் வந்திறங்கினார். மதுரை விமான நிலையத்தில் பிரதமரை, பாஜக சார்பில் மாநிலப் பொதுச் செயலாளர் ராம.சீனிவாசன், பெருங்கோட்ட பொறுப்பாளர் கதலி நரசிங்க பெருமாள், மதுரை மாவட்ட தலைவர்கள் மாரி சக்கரவர்த்தி, ராஜசிம்மன், சிவலிங்கம், தேனி, திண்டுக்கல் மாவட்ட பாஜக தலைவர்கள் மற்றும் பாஜக பிரிவு நிர்வாகிகள் உட்பட 28 பேர் பிரதமரை வரவேற்றனர்.
ஆனால், மாவட்டப் பார்வையாளர்கள் மற்றும் முன்னாள் மாவட்ட தலைவர்களுக்கு வாய்ப்பு வழங்கவில்லை என புகார் எழுந்துள்ளது. பிரதமர் வரவேற்பு நிகழ்ச்சிக்கு கட்சியினரை தேர்வு செய்த மாநில நிர்வாகிகள், தங்களுக்கு வேண்டியவர்களை மட்டும் தேர்வு செய்து, தங்களை புறக்கணித்துவிட்டதாக மதுரை, திண்டுக்கல், தேனி, விருதுநகர் மாவட்டங்களைச் சேர்ந்த மாவட்டப் பார்வையாளர்கள் மற்றும் நிர்வாகிகள் அதிருப்தியில் உள்ளனர்.
இது குறித்து கட்சி நிர்வாகிகள் கூறியதாவது: பிரதமர் வருகையின் போது அவரை வரவேற்கும் கட்சியினரை தேர்வு செய்வதில் முறை உள்ளது. அதன்படி, மாவட்ட தலைவர்கள், மாவட்டப் பார்வையாளர்கள், மாநில நிர்வாகிகள் என்ற வரிசையில் தேர்வு செய்யப்பட்டு அனுமதி பெறப்படும். பிரதமர் மீண்டும் வரும்போது, முந்தைய வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்காதவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும்.
இந்த முறை மதுரைக்கு பிரதமர் வருகை தந்தபோது, மாவட்ட தலைவர்கள், பார்வையாளர்கள், மாநில நிர்வாகிகளை அடுத்து, கட்சிப் போராட்டங்களில் ஈடுபட்டு சிறை சென்றவர்கள் என்ற அடிப்படையில் பிரதமரை வரவேற்க கட்சியினரை தேர்வு செய்திருக்க வேண்டும். அதை விடுத்து, மாவட்டப் பார்வையாளர்கள், முன்னாள் தலைவர்களுக்கு பிரதமரை சந்திக்கும் வாய்ப்பு வழங்காமல் மாநில நிர்வாகிகள் பார்த்துக் கொண்டனர். அவர்களுக்கு வேண்டியவர்கள், கட்சியில் தீவிரமாகச் செயல்படாதவர்களை தேர்வு செய்துள்ளனர்.
இதனால், முன்னாள் மாவட்ட தலைவர்கள், பார்வையாளர்கள், நிர்வாகிகள் அதிருப்தியில் உள்ளனர். இதுகுறித்து தேசிய தலைமையிடம் புகார் அளிக்க உள்ளோம் என்றனர்.