சென்னை: நல்ல வேளை அதிமுக உறுப்பினர்கள் காவி உடையில் வராமல் கருப்பு சட்டையில் வந்திருந்திருக்கிறார்கள். இதற்காக என்னுடைய அளவுகடந்த மகிழ்ச்சியை தெரிவித்துக்கொள்கிறேன் என சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவை நடந்து வரும் நிலையில், நேற்று சட்டப்பேரவைக்கு வருகை தந்த அதிமுக எம்எல்ஏக்கள் டாஸ்மாக் ஊழலை குறிப்பிடும் வகையில் ' யார் அந்த தியாகி ' என்ற பேட்ஜ் அணிந்து வந்தனர். இதையடுத்து பேட்ஜ் அணிந்து அமளியில் ஈடுபட்ட அதிமுக எம்எல்ஏக்களை சட்டப்பேரவைத் தலைவர் வெளியேற்றி, முதல்வர் வேண்டுகோளுக்கு இணங்க சட்டப்பேரவையில் இருந்து ஒரு நாள் மட்டும் சஸ்பென்ட் செய்தார்.
இதையொட்டி இன்று சட்டப்பேரவைக்கு வந்த எதிர்கட்சித் தலைவர் பழனிசாமி உள்ளிட்ட அதிமுக எம்எல்ஏக்கள், சட்டப்பேரவைத் தலைவரின் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் கருப்புச் சட்டை அணிந்து வருகை தந்து கவனம் ஈர்த்தனர்.
இதுகுறித்து இன்று சட்டசபையில் பேசிய முதல்வர் ஸ்டாலின், “எதிர்க்கட்சியாக இருக்கக்கூடிய அதிமுகவினர் கருப்பு சட்டையோடு வந்திருக்கிறார்கள். அவர்கள் கருப்பு சட்டையோடு வந்ததற்காக நான் என்னுடைய மகிழ்ச்சியை தெரிவித்துக் கொள்கிறேன். நல்ல வேளை காவி உடையில் வராமல் கருப்பு சட்டையில் வந்திருந்திருக்கிறார்கள். இதற்காக என்னுடைய அளவுகடந்த மகிழ்ச்சியை தெரிவித்துக்கொள்கிறேன்” என்றார். இதனால் திமுக உறுப்பினர்கள் மற்றும் சபாநாயகர் உள்ளிட்டோரிடம் சிரிப்பலை எழுந்தது.