புதுச்சேரி: போலி கால்சென்டர் நடத்தி புதுச்சேரி உட்பட பல மாநில இளைஞர்களிடம் மோசடி செய்த ஹரியானாவைச் சேர்ந்த இருவரை புதுச்சேரி சைபர் கிரைம் போலீஸார் இன்று கைது செய்தனர்.
புதுச்சேரியைச் சேர்ந்த சிவனேஷ் வேலைக்காக பல இணையதளங்களில் பதிவு செய்திருந்தார். அவரது மொபைல் எண்ணுக்கு எச்ஆர் என சொல்லி வந்த அழைப்பின் மூலம் பிரபல ஐடி நிறுவனத்தில் பணி இருப்பதாக தெரிவித்துள்ளனர். அதையடுத்து தேர்வுக் கட்டணம், செயலாக்க கட்டணம் என பல கட்டணங்களாக ரூ.1 லட்சத்து 74 ஆயிரம் டெபாசிட் செய்ய அந்த நபர் தெரிவித்துள்ளார். அதை நம்பி சிவனேஷ் அவர் சொன்ன வங்கிக் கணக்கில் செலுத்தியுள்ளார். ஆனால் அதன்பிறகு அவர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை.
இதையடுத்து சைபர் கிரைம் போலீஸில் அவர் புகார் தந்தார். அதையடுத்து எஸ்எஸ்பி நாரா சைதன்யா, எஸ்பி ரங்கநாதன் உத்தரவின்பேரில் இன்ஸ்பெக்டர்கள் தியாகராஜன், கீர்த்தி ஆகியோர் விசாரணை நடத்தினர். அதையடுத்து பணம் செலுத்திய வங்கிக் கணக்கு பர்வீன், கவுரவ் ஆகியோரது என்பது தெரிந்தது. இதையடுத்து ஹரியானாவில் உள்ள பரிதாபாத்தில் அவர்கள் இருப்பது தெரிந்தது.
இதையடுத்து சைபர் கிரைம் எஸ்ஐ ராதாகிருஷ்ணன், உதவி எஸ்ஐ சுதாகர், தலைமை காவலர் அருண்குமார் ஆகியோர் அடங்கிய தனிப்படை அவர்கள் டெல்லியில் இருப்பதை கண்டறிந்து நேரில் சென்று பிடித்து புதுச்சேரிக்கு இன்று அழைத்து வந்தனர். இதுதொடர்பாக எஸ்எஸ்பி நாரா சைதன்யா கூறுகையில், பர்வீன், கவுரவ் ஆகியோர் நூற்றுக்கணக்கான வங்கி கணக்குகள் வைத்துள்ளனர். கவுரவ் 2019ல் நொய்டாவில் வேலைவாய்ப்பு மோசடி செய்யும் கால் சென்டரில் வேலை பார்த்துள்ளார்.
அதன்பிறகு கோவிட் காலத்தில் கவுரவ் தனது நண்பர் சந்தீப்புடன் சேர்ந்து சொந்தமாக போலி கால் சென்டர் வேலைவாய்ப்பு தருவதாக கூறி ஏமாற்ற தொடங்கினர். ஆயிரத்துக்கும் மேற்பட்ட நபர்களிடம் பல கோடி மோசடி செய்துள்ளனர். பல மாநிலங்களில் புகார் பதிவானது. முதல் முறையாக புதுச்சேரி சைபர் கிரைம் போலீஸார் தற்போது பர்வீன், கவுரவ் ஆகிய இருவரை கைது செய்தனர். இதில் சந்திப் தலைமறைவாகியுள்ளார். அவரை தேடி வருகிறோம். இதில் கைதான இருவரும் பட்டதாரிகள். ஒருவர் பொறியியல் பட்டதாரி என்று குறிப்பிட்டார்.