இதுதான் கவுரவிக்கும் முறையா? - திண்டுக்கல் ஆட்சியர் அலுவகத்தில் தரையில் அமர வைக்கப்பட்ட தூய்மை காவலர்கள்


திண்டுக்கல்: சிறப்பாகப் பணி செய்ததற்கு ஊக்கத் தொகை வழங்கி கவுரவிக்க, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வரவழைக்கப்பட்ட தூய்மைக் காவலர்கள் தரையில் அமர வைக்கப்பட்டது, அவர்களுக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தியது.

திண்டுக்கல் மாவட்டத்தில் தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்) பகுதி 2, திடக்கழிவு மேலாண்மை திட்டம், கிராம ஊராட்சிகளில் தூய்மை காவலர்கள் மூலம் வீடு வீடாகச் சென்று குப்பை சேகரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த குப்பையை உரமாக்குதல், மக்காத மறு சுழற்சி செய்யத்தக்க குப்பையை நேரடியாக விற்பனை செய்தல், மறுசுழற்சி செய்யக்கூடிய பிளாஸ்டிக் கவர்கள், பாலித்தீன் கழிவு மேலாண்மை அலகுகளுக்கு விற்பனை செய்தல், பிளாஸ்டிக் பைகளை அரைத்து தார் சாலை அமைக்க விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு கிடைக்கும் வருவாய் தூய்மை காவலர்களுக்கு ஊக்கத் தொகையாக அந்தந்த கிராம ஊராட்சிகளில் பிரித்து வழங்கப்பட்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக நேற்று திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த குறைதீர் கூட்டத்தில் சிறப்பாக பணி புரிந்த தூய்மை காவலர்களை ஆட்சியர் கவுரவித்து ஊக்கத்தொகை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்காக நத்தம், வேடசந்தூர், வட மதுரை, குஜிலியம் பாறை வட்டார தூய்மை காவலர்கள் 25-க்கும் மேற்பட்டவர்கள், திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வரவழைக்கப் பட்டிருந்தனர்.

குறைதீர் கூட்ட அரங்கில் அனைத்து துறை அலுவலர்கள் உள்ளிட்ட அனைவரும் இருக்கைகளில் அமர்ந்திருந்தனர். ஆனால் தூய்மை காவலர்க ளுக்கு மட்டும் இருக்கைககள் வழங்கப்படாமல் தரையில் அமர வைத்தது, அவர்களுக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தியது. கிராமப் புறங்களில் குப்பையை சிறப்பாக கையாண்டதற்கு கவுரவிக்கிறோம் என அழைத்து வந்து நூற்றுக்கும் மேற்பட்டோர் அரங்கில் இருக்கைகளில் அமர்ந்திருந்த நிலையில் தங்களை தரையில் உட்காரவைத்துள்ளனரே என அவர்கள் மன வேதனை அடைந்தனர்.

காலை 10.30 மணிக்கு மக்கள் குறைதீர் கூட்டம் தொடங்கினாலும் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் செ.சரவணன் ஒரு மணி நேரம் தாமதமாக 11.30 மணிக்கு தான் மனுக்களை பெற வந்தார். அதுவரை காத்திருந்த தூய்மை காவலர்களை அழைத்து ஒவ்வொருக்கும் ஊக்கத் தொகையை ஆட்சியர் சரவணன் வழங்கி வாழ்த்து தெரிவித்தார். இனி வரும் காலங்களிலாவது தூய்மை காவலர்களை உரிய மரியாதையுடன் நடத்த வேண்டும் என மனு கொடுக்க வந்திருந்த பொது மக்களும் ஆதங்கப்பட்டு சென்றனர்.

x