கோவை: தமிழக உணவு பாதுகாப்பு அலுவலரின் தவறான தகவலால் தர்பூசணி சாகுபடி செய்த விவசாயிகளுக்கு கடும் இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, அரசு ஏக்கருக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடாக வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் நிறுவன தலைவர் ஈசன் முருகசாமி விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழக உணவு துறையின் முக்கிய அலுவலராக இருந்தவர், தர்பூசணி பழங்களில் ஊசி மூலம் கலப்படம் செய்வதாக தெரிவித்த தவறான, உள் நோக்கம் கொண்ட, அவதூறான கருத்தால் தர்பூசணி விற்பனை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
கிலோ ரூ.15-க்கு விற்றுவந்த தர்பூசணி தற்போது கிலோ ரூ.3-க்கு மட்டுமே கொள்முதல் செய்யப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. கள்ளச் சாராய உயிரிழப்புகளுக்கு அரசு இழப்பீடு வழங்கியதை போல, அதிகாரியின் தவறான செயலுக்கு அரசு பொறுப்பேற்று உரிய இழப்பீடு வழங்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.